ரிசர்வ் வங்கி உத்தரவால் அடகு நகைகளை புதுப்பிக்க மறுக்கும் வங்கிகள்; மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி: விவசாயிகள், பொதுமக்கள் கடும் பாதிப்பு

தூத்துக்குடி: ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவால் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அடகு வைத்த நகைகளை வட்டியை மட்டும் செலுத்தி புதுப்பித்து தர மறுப்பதால் தனியார் நிதி நிறுவனங்களை பொதுமக்கள் நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அதிக வட்டிக்கு வாங்கி நகையை மீட்கும் பரிதாப நிலையால் மீண்டும் கந்துவட்டி தலைதூக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் வட்டிக் கடைகளை விட வட்டி குறைவாகும். இதன் காரணமாக சாமானிய கிராமப்புற குடும்பத்தினர், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் அவசர தேவைக்கு நகைகளை அடகு வைக்க, கடன் பெற தேசிய, தனியார் வங்கிகளையே நம்பியிருக்கின்றனர்.

தென்மாவட்டங்களில் பரவலாக விவசாய பணிகளுக்கும், குடும்ப, தொழில் தேவைகள் உள்ளிட்ட செலவினங்களுக்கும் தங்களது நகைகளை அடகு வைத்து கடனாக பணத்தை பெற்று வருகின்றனர். நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் கடன் பெற்று ஓராண்டு முடியும்போது வட்டி கட்டி கடனை மீண்டும் புதுப்பித்து வந்தனர். இவ்வாறாக நகை ஏலத்துக்குச் செல்லாமல் பணம் நெருக்கடியான சூழலிலும் தங்கள் நகைகளை பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் தேசிய வங்கிகளில் நகைக்கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்களது நகை கடனுக்கு வட்டி கட்டி உடனே புதுப்பிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. அதாவது வட்டியை மட்டும் கட்டி நகைக் கடனை புதுப்பிக்காமல் முழு தொகையையும் கட்டி நகையை மீட்டு விடுங்கள். பின்னர் மறுநாள் புதிய நகைக்கடன் பெறுங்கள் என வங்கியில் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான சூழலில் நகை ஏலத்துக்கு செல்லாமல் தடுக்க குறிப்பிட்ட தேதியில் நகையை மீட்க வேறு வழியின்றி அதிக வட்டிக்கு வெளியில் பணம் வாங்கி நகையை மீட்டு மறுபடியும் அடகு வைக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள், பொதுமக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இவர்களை குறிவைத்து வட்டி, மீட்டர் வட்டிகாரரர்கள் என வங்கியைச் சுற்றி பணத்துடன் திரிந்து சிலர் வட்டிக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இது ஒரு தனி வட்டியாக வந்து தொல்லை தருகிறது. குறைந்த நேரத்தில் மீண்டும் வங்கிகளில் நகைகள் அடகு வைக்கப்பட்டாலும் இந்த இடைப்பட்ட நேரத்தில் வெளிநபர்களை பணத்திற்காக அணுகும் சூழலை இந்த புதிய முறை ஏற்படுத்துவதாக விவசாயிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

முன்பெல்லாம் நகை அடகு வைத்து ஒரு வருடம் முடியும் நிலையில் வங்கியில் இருந்து கடிதம் மூலம் அழைப்பு வரும் மீட்க முடியாத சூழலில் ஏற்கனவே உள்ள கடனுடன் வட்டிக்கணக்கையும் சேர்த்து அதே நகையில் கணக்கில் புதிய நகைக்கடனாக எடுத்துக் கொள்வர். இப்போதும் நகைக்கடன் வழங்கப்படுகிறது, ஆனால் பழைய நகைக்கடனுக்கான தொகையை கட்டி நகையை மீட்டு மீண்டும் வைக்க சொல்கின்றனர். இந்த இடைப்பட்ட பரிமாற்றத்தில் பணத்திற்காக அலைந்து வட்டிக்காரர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபாய் வரை வட்டி என்ற வட்டி விகிதத்தில் கடன் கொடுக்கின்றனர். கந்துவட்டியை ஊக்குவிக்கும் இச்செயலை உடனே வங்கிகள் நிறுத்தி நகைக்கடனில் பழைய நிலையை தொடர வேண்டும் என்பதே பொதுமக்கள், விவசாயிகளின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

The post ரிசர்வ் வங்கி உத்தரவால் அடகு நகைகளை புதுப்பிக்க மறுக்கும் வங்கிகள்; மீண்டும் தலைதூக்கும் கந்துவட்டி: விவசாயிகள், பொதுமக்கள் கடும் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: