முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் 25,000 வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு ஆணை

சென்னை: முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் 25,000 வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 2024-25, 2025-26 நிதியாண்டுகளில் 2,57,006 வீடுகளில் ரூ.1,954.20 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்க்க நிர்வாக அனுமதி கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது, அதில் 2024-25 நிதியாண்டில் 1,46,634 வீடுககளில் ரூ.1041.32 கோடியில் பழுதுபார்க்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

2000-01 நிதியாண்டு வரை கிராமப்புறங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட வீடுகளை மறுசீரமைப்பு செய்வதற்கான வழிகாட்டுதல்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கிராமப்புறங்களில் 2001ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சேதமடைந்துள்ள வீடுகள் மறுசீரமைப்பு செய்ய முடியாத வீடுகளை புதிதாக கட்டித்தர அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் படி 25,000 புதிய வீடுகள் 2025-26 நிதியாண்டில் ரூ.600 கோடியில் கட்டப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் ஊர்க வளர்ச்சி ஆணையர் அளித்த கடிதத்தில், 2001ம் ஆண்டுக்கு முன் அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளை மறுசீரமைப்பு செய்யும் திட்டம் 2024-25 நிதியாண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடங்கியது முதல் ஒரு லட்சம் வீடுகள் மறுசீரமைப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்திற்கான களப்பணியின் போது பல வீடுகள் மறுசீரமைக்க முடியாத நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இந்த வீடுகள் மறுகட்டுமானம் செய்து தர வேண்டும் என்றும் பயணாளிகள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, இந்த சேதமடைந்த வீடுகளை மறுக்கட்டுமானம் செய்ய புதிய திட்டம் வகுக்க வேண்டும் என ஆணையர் முன்மொழிந்ததன் அடிப்படையில் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டம் இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு மறுசீரமைக்க முடியாத வீடுகள் ஒரு வீடு 210 சதுரடியில் ரூ.2.40 லட்சத்தில் மறுகட்டுமானம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 90 நாட்களில் கட்டவும், முதற்கட்டமாக 25,000 வீடுகள் ரூ.600 கோடியில் மறுக்கட்டுமானம் செய்ய முன்மொழியப்பட்டது.

இதையடுத்து முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்திற்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒப்பபுதல் அளிக்கவும், ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யவும் ஊரக வளர்ச்சி ஆணையர் கோரிக்கை வைத்தார். இதனை கவனமாக பரிசீலித்த அரசு மறுசீரமைக்க முடியாத வீடுகளை புதிதாக கட்டித்தர முதலமைச்சர் வீடுகள் மறுகட்டுமான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியும், ரூ.100 கோடி மாநில அரசின் நிதி மற்றும் திட்டத்திற்கான நிதி ரூ.500 கோடி என மொத்தம் ரூ.600 வழங்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

The post முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் 25,000 வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு ஆணை appeared first on Dinakaran.

Related Stories: