வேலூர், மார்ச் 18: காட்பாடி ரயில்வே போலீசில் மகளிர் வாட்ஸ்அப் குரூப் தொடங்கப்பட்டு அதில் ரெகுலர் பெண் பயணிகளை இணைக்கும் பணியில் ரயில்வே போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சமீப காலமாக ரயில்களில் பயணிக்கும் பெண்களிடம் பல்வேறு அத்துமீறல் சம்பவங்களும், கொலை, வழிப்பறி, தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் ரெகுலராக பயணிக்கும் மாணவிகள், ஒன்றிய, மாநில அரசு பெண் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி பெண் ஆசிரியர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து வாட்ஸ்அப் குரூப் தொடங்க ரயில்வே போலீஸ் நிர்வாகம் அனைத்து ரயில்வே இன்ஸ்பெக்டர்களையும் அறிவுறுத்தியது.
அதன் அடிப்படையில் தினமும் அதிகளவில் பெண் பயணிகள் சென்று வரும் ரயில் நிலையங்களில் முதல்கட்டமாக வாட்ஸ்அப் குரூப் தொடங்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரல், அரக்கோணம், சோளிங்கர், வாலாஜா ரோடு, காட்பாடி, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி, களம்பூர், வேலூர் கன்டோன்மென்ட், திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட மாநிலம் முழுவதும் ரயில்வே போலீசார் வாட்ஸ்குரூப் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காட்பாடி ரயில் நிலையத்தில் கடந்த ஒரு வாரகாலமாக இப்பணி தீவிரமடைந்துள்ளது. இவ்வாறு தொடங்கப்படும் வாட்ஸ்அப் குரூப் மூலம் ரயில்களில் சந்தேகத்துக்குரியவர்களின் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்வதன் மூலம் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.
The post பெண் பயணிகள் பாதுகாப்புக்காக காட்பாடி ரயில்வே போலீசார் மகளிர் வாட்ஸ்அப் குரூப் துவக்கம் appeared first on Dinakaran.