வேலூர், டிச.20: வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 2,15,025 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தெரிவிக்க விண்ணப்பிப்பவர்களுக்கு வரும் 18ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஜனவரி 1ம் தேதி 2026ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. அதேபோல், வேலூர் மாவட்டத்தில் 13 லட்சத்து 3 ஆயிரத்து 30 வாக்காளர்களுக்கு வீடு, வீடாக கணக்கீட்டு படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பப் பெறப்பட்டது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1,314 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, விசிக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், ஆர்டிஓக்கள் செந்தில்குமார், சுபலட்சுமி, கமிஷனர் லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர். அனைத்து வரைவு வாக்காளர்களின் கணக்கெடுப்பு படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான வாக்காளர்களின் விவரங்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்த வாக்காளர்கள் 10,88,005 பேர் உள்ளனர்.
மேலும், வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் இறப்பு, நிரந்தர குடிபெயர்வு, இருமுறை பதிவு, கண்டறிய இயலாதவர்கள் மற்றும் மற்றவை ஆகிய இனங்களின் கீழ் 2,15,025 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த 1,314 வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு, அதில் 113 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 1,427 வாக்குச்சாவடிகள் வெளியிடப்பட்டுள்ளது.மேலும், வேலூர் மாவட்டத்தில் உள்ள 1,427 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 676 வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் சார் ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள், 6 தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
தொடர்ந்து, நேற்று முதல் வரும் ஜனவரி 18ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு, பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய படிவம் 8 வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள படிவம் 6ஏ அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஜனவரி 18ம் தேதி வரை பெறப்பட்ட உள்ள படிவங்கள் மீது உரிய விசாரணை நடத்தி இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப்படும் என்று கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.
