சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: ஆதரவு – 63; எதிர்ப்பு – 154; பாஜ, பாமக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், வாக்கெடுப்பில் படுதோல்வி அடைந்தது. இந்த தீ்ரமானத்துக்கு ஆதரவாக 63 பேரும், எதிராக ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் 154 பேரும் வாக்களித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை படுதோல்வி அடையச் செய்தனர். தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுவை பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி உள்ளிட்ட சிலர் கடந்த ஜனவரி மாதம் பேரவை தலைவரிடம் கடிதம் வழங்கி இருந்தனர்.

அதில், ‘சட்டப்பேரவையில் அதிமுகவினர் அதிக நேரம் பேச அப்பாவு அனுமதிப்பது இல்லை. அதிமுகவினர் பேசுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்வது இல்லை. பாரபட்சத்துடன் செயல்படும் அவரை நீக்க வேண்டும்’ என்று அதில் தெரிவித்திருந்தனர். கடந்த 14, 15ம் தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், அந்த தீர்மானம் 17ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தின் முடிவில் அப்பாவு தெரிவித்தார். அதன்படி, பேரவை தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.

நேற்று காலை 9.30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது அதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்த உடன் காலை 10.54 மணிக்கு பேரவை தலைவரை பதவியில் இருந்து நீக்க கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று பேரவை தலைவர் அப்பாவு அறிவித்தார். அதைத்தொடர்ந்து, அப்பாவு தீர்மானத்தை வழிமொழிபவர்கள் எழுந்து நிற்கும்படி கேட்டுக் கொண்டார். அதிமுக எம்எல்ஏக்கள், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்றனர்.

பேரவை தலைவர் அப்பாவு: எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கொண்டு வந்த தீர்மானத்தை 35க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரிப்பதால் இந்த தனி தீர்மானம் இன்றே விவாதிக்கப்படும். என்னை (அப்பாவு) நீக்குவது குறித்த தீர்மானம் இன்று விவாதத்துக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால், சபையை தொடர்ந்து துணை சபாநாயகர் நடத்துவார்’’ என்று கூறி 10.56 மணிக்கு சட்டப்பேரவையில் உள்ள தனது சபாநாயகர் இருக்கையில் இருந்து அப்பாவு வெளியே சென்றார். தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அவையை நடத்தினார்.

இதையடுத்து அவை நடவடிக்கைகளை தொடர்ந்த துணை சபாநாயகர், பேரவை தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக கூறினார். அதைத்தொடர்ந்து, எதிர்கட்சி துணைத்தலைவர் உதயகுமார், அப்பாவுவை பேரவை தலைவர் பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் கொண்டு வந்த தீர்மானத்தை வழிமொழிகிறேன் என்று கூறினார். இதைத்தொடர்ந்து, ஆர்.பி.உதயகுமார் எழுந்து இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவரை (எடப்பாடி) பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: தற்போதைய சபாநாயகர் அப்பாவு, நடுநிலையோடு செயல்படாமல் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். நாங்கள் பேசும்போது, அவர் பல்வேறு குறுக்கீடுகளை செய்து அவரே பதில் அளிக்கிறார். அலுவல் ஆய்வு கூட்டம் நடக்கும் போது, பேரவை கூட்டத்தை அதிக நாட்கள் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைப்போம். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் 116 நாட்கள் மட்டுமே பேரவை கூட்டம் நடந்துள்ளது.

எதிர்கட்சிகள் பேச சபாநாயகர் தடையாக இருக்கிறார். எதிர்கட்சிகள் பேசினால் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தால் எங்களை இருட்டடிப்பு செய்கிறார்கள்.
டங்ஸ்டன் பிரச்னை பற்றி ராஜன் செல்லப்பா பேசும்போது, பிரச்னையை நீங்கள் தான் தூண்டி விடுகிறீர்கள் என்கிறார். எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று பேரவை தலைவரிடம் கடிதம் கொடுத்தும், 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் அதை அறிவித்தார். பொதுக்கணக்கு குழு தலைவராக பிரதான எதிர்க்கட்சி தலைவரைத்தான் நியமிக்க வேண்டும். ஆனால் அது வழங்கப்படவில்லை. இது ஒருதலைபட்சமாகும்.

(தொடர்ந்து எடப்பாடி பேசும்போது, கடந்த அதிமுக ஆட்சியில் சபாநாயகரின் செயல்பாடு குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த பிரச்னைகள் குறித்தும், அப்போதைய சபாநாயகர் நடந்து கொண்ட விதம் குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் பேசினார். தற்போது, சபாநாயகர் அப்பாவு மீது ஏதாவது தவறு, குற்றச்சாட்டு இருந்தால் இங்கு பதிவு செய்யலாம். அதற்கும், அப்பாவுக்கும் என்ன சம்பந்தம்? அப்படியென்றால் நாங்களும் குற்றம்சாட்டி பேசுவோம். பின்னர் அதிமுக வெளிநடப்பு செய்யும் சூழ்நிலை ஏற்படும். அதனால் தீர்மானத்தின் மீது மட்டும் பேசுங்கள் என்று கூறினார்.)

எடப்பாடி பழனிசாமி: அப்பாவு ஒரு ஆசிரியர், அன்பாக பழகக் கூடியவர். அவர் மீது எந்த விருப்பும், வெறுப்பும் கிடையாது. ஆனால், கண்ணியத்தோடு செயல்படும் ஒருவர் தான் சபாநாயகராக இருக்க வேண்டும். எங்கள் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தால் நகைக்கிறார். எங்கள் உறுப்பினர்கள் கொடுக்கும் பெரும்பாலான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுக்கப்படவே இல்லை. பேரவை தலைவரின் செயல் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கிறது. அதனால் அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது டிவிஷன் வாரியாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): இன்று பேரவை தலைவரை நீக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் பேசியிருக்கிறார். பேரவை தலைவர் ஒரு ஆசிரியர், பண்பாளர். அன்னிய மண்ணிலும் தமிழ்நாட்டை பெருமையோடு பேசி வருகிறார். நெல்லை தமிழில் பேசுவார், நல்ல தமிழில் பேசுவார். பல பேரவை தலைவர்கள் ஒரு பக்கம் மட்டுமே பார்ப்பார்கள். இவர் இரண்டு பக்கமும் பார்ப்பார். காங்கிரஸ் அவரை ஆதரிக்கிறது. அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

இதேபோன்று சிந்தனை செல்வன் (விசிக), நாகை மாலி ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஸ்ஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகிய திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் தீர்மானத்தை எதிர்த்து பேசினர். அதே நேரம் புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி தீர்மானத்தை ஆதரித்து பேசினார். இந்த வாக்கெடுப்பில் பாமக, பாஜ ஆகிய கட்சிகள் அவையில் இல்லாததால் பங்கேற்வில்லை.

இதைத்தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராகவும், சபாநாயகருக்கு ஆதரவு தெரிவித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். பின்னர், தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு விடுவதாக துணை சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்தார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டிவிஷன் வாரியாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து துணை சபாநாயகர் பேசும்போது, ‘முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் எடுத்து கொள்ளப்படு்ம்’ என்று கூறி குரல் வாக்கெடுப்புக்கு விட்டார்.

அதன்படி தீர்மானத்தை ஆதரிப்பவர்கள் ‘ஆம்’ என்றும், எதிர்ப்பவர்கள் ‘இல்லை’ என்றும் கூறும்படி கேட்டுக் கொண்டார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து குரல் எழுப்பினர். தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மிக பலத்த சத்தத்துடன் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் குரலை பதிவு செய்தனர். குரல் வாக்கெடுப்பின்போது, அதிமுக கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக துணை சபாநாயகர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, டிவிஷன் வாரியாக வாக்கெடுப்பு நடத்த துணை சபாநாயகர் கேட்டுக் கொண்டார். அப்போது பேரவையின் அனைத்து கதவுகளையும் அடைக்க அவை காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. பேரவைக்குள் இருப்பவர்கள் யாரும் வெளியே செல்லவும், அதேநேரம் புதிதாக யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உறுப்பினர்கள் அவரவர் இருக்கையில் அமரும்படி துணை சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, டிவிஷன் வாரியாக இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சட்டப்பேரவையில் மொத்தம் 6 டிவிஷன்கள் உள்ளது.

அதன்படி, ஒவ்வொரு டிவிஷன் வாரியாக ஆதரிப்பவர்கள் முதலில் எழுந்து நிற்கவும், தீர்மானத்தை எதிர்ப்பவர்கள் இரண்டாவதாக எழுந்து நிற்கவும், 3வதாக நடுநிலை வகிப்பவர்கள் எழுந்து நிற்கும்படியும் துணை சபாநாயகர் கேட்டுக் கொண்டார். அதன்படி, தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்றனர். அவர்களது பெயர்களை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வாசித்தார். அதன்பிறகு அவர்கள் இருக்கையில் உட்கார்ந்தனர்.

அதேபோன்று தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் எழுந்து நிற்கும்போது, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், அவர்கள் பெயர்களை வாசிக்க இருக்கையில் அமர்ந்தனர். பின்னர் துணை சபாநாயகர் பிச்சாண்டி கூறும்போது, தீர்மானத்துக்கு ஆதரவாக 63 உறுப்பினர்களும், தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 154 உறுப்பினர்களும், ஒருவர் கூட நடுநிலை வகிக்கவில்லை என்றும் தீர்ப்பளித்தார். அதன்படி அதிமுக உறுப்பினர்கள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாகவும், சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து பேரவை தலைவர் பதவியில் நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சபாநாயகர் அப்பாவு மீது கொண்டு வந்த தீர்மானம் படுதோல்வி அடைந்தையொட்டி பிற்பகல் 12.20 மணிக்கு மீண்டும் சட்டப் பேரவைக்குள் அப்பாவு வந்தார். அப்போதும் திமுக, கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் பலரும் எழுந்து நின்று மேஜையை தட்டி வரவேற்றனர். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தனது அவை நடவடிக்கையை தொடர்ந்தார்.

* முதல்வரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்…
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்த பிறகு தொடர்ந்து அவையை நடத்திய பேரவை தலைவர் அப்பாவு பேசும்போது,‘‘நான் பேரவை தலைவராக தேர்ந்தெடுத்தது முதல் என் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக முதல்வர் உள்பட இங்கு பேசிய எதிர்க்கட்சி தலைவர், கூட்டணி கட்சி தலைவர்கள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தேன். இதை நினைக்கும்போது இன்னும் பெருமையாக உள்ளது. இங்கு நடந்த விவாதங்களை கவனித்து சிலவற்றை நானே திருத்தி இருப்பேன். சிலவற்றை முதல்வரை பார்த்து திருத்தி இருப்பேன். முதல்வர் ஒரு நாள் கூட என்னிடம், எதிர்க்கட்சிகளுக்கு இவ்வளவு நேரம் ஏன் பேச அனுமதி கொடுத்தீர்கள், அவர்களுக்கு ஏன் பேச அனுமதி அளித்தீர்கள், அந்த வார்த்தை ஏன் நீக்கினீர்கள்? என்று கேட்டதே கிடையாது. இது எவ்வளவு பெரிய ஜனநாயகம்.

அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரே நாளில் 3, 4 மானியம் எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது. ஒரே நாளில் 24 மானியம் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டதும் இதே மன்றத்தில்தான், அதுவும் அதிமுக ஆட்சியில்தான். டங்ஸ்டன் பிரச்னையில்கூட பேச அனுமதிக்க வேண்டும் என்று அன்றைய தினம் காலையில் என்னிடம் அனுமதி கேட்டார்கள். நான், 66 எம்எல்ஏக்கள் இருக்கிறீர்கள். ஒருவர் கூட எழுதி தரவில்லையே என்றுதான் கூறினேன். அன்றைய தினம்கூட ராஜன் செல்லப்பாவை, பிரச்னையை தூண்டி விடாதீர்கள் என்று சொல்லவில்லை. என் மீது முதல்வர், முன்னாள் முதல்வர், தோழமை கட்சியினர் என அனைவரும் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. என்னை மதித்து பாசத்தோடு பழகி வரும் அனைவருக்கும் மீண்டும் நன்றி” என்றார்.

The post சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: ஆதரவு – 63; எதிர்ப்பு – 154; பாஜ, பாமக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை appeared first on Dinakaran.

Related Stories: