ஏமனில் ஹவுதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 31 பேர் பலி: எச்சரிக்கையை மீறியதால் டிரம்ப் நடவடிக்கை

மேற்கு பாம் பீச்: ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள்மீது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவுப்படி வான்வழி தாக்குதல் நடந்தது. இதில் ஹவுதி படையினர் 31 பேர் உயிரிழந்தனர்.100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில், காசாவிற்கு மனிதாபிமான உதவி நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய கிழக்கின் செங்கடல் பகுதி வழியாக வரும் கப்பல்களை ஹவுதி போராளிக் குழு தாக்குதல் நடத்தி வந்தது. அதற்கு எதிரான தாக்குதலுக்கு உத்தரவிட்ட அதிபர் டிரம்ப், செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள்மீது தாக்குதலை நிறுத்தாவிட்டால் அவர்கள்மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தார்.

இந்த நிலையில் அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், ஏமனின் ஹவுதி அமைப்புக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் அமெரிக்க ராணுவம் ஏமனில் நடத்திய வான்வழி தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர். டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில்,அமெரிக்க கப்பல் போக்குவரத்து, வான்வழி மற்றும் கடற்படை சொத்துக்களைப் பாதுகாக்கவும், கடல்வழி சுதந்திரத்தை மீட்டெடுக்கவும்,தீவிரவாதிகளின் தளங்கள், தலைவர்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மீது எங்களுடைய துணிச்சலான போர்வீரர்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

உலகின் நீர்வழிகளில் அமெரிக்க வணிக மற்றும் கடற்படைக் கப்பல்கள் சுதந்திரமாகப் பயணிப்பதை எந்த பயங்கரவாத சக்தியும் தடுக்க முடியாது.மேலும், கிளர்ச்சி குழுவை ஆதரிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும் என எச்சரிக்கிறேன். அதன் ஆதரவு பெற்ற குழுக்களின் செயல்களுக்கு அந்த நாட்டை முழுமையாகப் பொறுப்பேற்க வைப்பேன் என குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலை போர்க்குற்றம் என்று கூறிய ஹவுதி குழு, இதற்கு தக்க பதிலடி கொடுக்க படையினர் தயாராக உள்ளதாக தெரிவித்தது. ஏமன் மீதான தாக்குதல் தொடரும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

The post ஏமனில் ஹவுதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்: 31 பேர் பலி: எச்சரிக்கையை மீறியதால் டிரம்ப் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: