லோகோ பைலட் 2ம் கட்ட தேர்வு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளிமாநில தேர்வு மையங்கள்: உடனடியாக மாற்ற வலியுறுத்தல்

மதுரை: சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தெற்கு ரயில்வே கோட்டத்தில் தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 5,696 உதவி லோகோ பைலட்டுகள் காலியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் கடந்தாண்டு பிப்ரவரி வெளியிட்டது. இத் தேர்வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் தகுதியானவர்களுக்கான முதற்கட்ட கணினி முறை தேர்வு கடந்த ஆண்டு நவ.25ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 ஆயிரத்து 315 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். இதற்கான தேர்வு முடிவுகள் பிப்.26ல் வெளியானது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 90 சதவீத தேர்வர்களுக்கான தேர்வு மையம் தமிழ்நாட்டை தவிர்த்து வெளி மாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது, ‘‘தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டு தேர்வர்கள் உடல், மனம் மற்றும் பொருளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இத்தேர்வினை இயல்பான மன நிலையில் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இதுபோல செய்துள்ளனர். எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிற்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்’’ என்றனர்.

The post லோகோ பைலட் 2ம் கட்ட தேர்வு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வெளிமாநில தேர்வு மையங்கள்: உடனடியாக மாற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: