இண்டியன்வெல்ஸ்: இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்கா, ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்காவும் (26 வயது), அமெரிக்காவை சேர்ந்த உலகின் 5ம் நிலை வீராங்கனை மேடிசன் கீசும் (30 வயது) மோதினர்.
துவக்கம் முதல் எந்த வாய்ப்பையும் விட்டுக் கொடுக்காமல் அபாரமாக ஆடிய சபலென்கா, மேடிசன் கீசை அமெச்சூர் வீராங்கனை போல் சுழற்றியடித்தார். முதல் செட்டில் எந்த புள்ளியும் பெறாமல் மேடிசன் வீழ்ந்தார். அடுத்த சுற்றில் அவரால் ஒரு புள்ளி மட்டுமே பெற முடிந்தது. இதனால், 6-0, 6-1 என்ற நேர் செட்களில் மேடிசனை வீழ்த்தி சபலென்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ரஷ்யாவை சேர்ந்த உலகின் 9ம் நிலை வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா (வயது 17), போலந்தை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக் (வயது 23) உடன் மோதினார். முதல் செட்டை மிர்ரா போராடி கைப்பற்றினார். அடுத்த செட் இகா வசம் சென்றது. வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை மிர்ரா எளிதில் கைப்பற்றினார். இதனால், 7-6, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற மிர்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். சபலென்கா, மிர்ரா இடையிலான இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.
* ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று அரையிறுதி மோதல்
இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டி, உலகின் 5ம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த டேனியில் மெத்வதெவ், உலகின் 12ம் நிலை வீரரான டென்மார்க்கை சேர்ந்த ஹோல்கர் ருனே இடையில் இன்று நடைபெறுகிறது. இரண்டாவது அரையிறுதிப் போட்டி, ஸ்பெயினை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரிட்டன் வீரர் ஜேக் அலெக்சாண்டர் டிரேப்பர் இடையே நடக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவோர், நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுவர்.
The post இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் இளம்புயல் மிர்ரா; நம்பர் 1 சபலென்கா appeared first on Dinakaran.