2வது மகளிர் டி20யில் இன்று கட்டுக்கு அடங்காத இந்தியா; தட்டுத் தடுமாறும் இலங்கை

விசாகப்பட்டினம்: இந்தியா – இலங்கை மகளிர் அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி, விசாகப்பட்டினத்தில் இன்று துவங்குகிறது. சமாரி அத்தப்பட்டு தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்று, தொடரில், 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்த அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி, விசாகப்பட்டினத்தில் இன்று துவங்குகிறது. உலகக் கோப்பையை வென்ற பின் ஆடும் முதல் தொடரான இதில் வெற்றி பெற, இந்திய அணி அதிகளவில் அலட்டிக் கொள்ளத் தேவைப்படாத நிலை காணப்படுகிறது. பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் வழக்கம் போல் இந்திய வீராங்கனைகள் அதகளப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், பீல்டிங்கில் ஆங்காங்கே காணப்படும் சில குறைகளை சரிசெய்ய வேண்டும். குறிப்பாக, பந்துகளை கேட்ச் பிடிப்பதில் இன்னும் உத்வேகம் காட்ட வேண்டும். முதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிகசும், ஸ்மிருதி மந்தனாவும் சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினர்.

பந்து வீச்சை பொறுத்தவரை, இந்திய அணியின் இடதுகை சுழல் பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா (20) அற்புதமாக பந்துகளை வீசி எதிரணியை திணறடித்து வருகிறார். இலங்கை அணியை பொறுத்தவரை, பேட்டிங்கில் எழுச்சி பெற வேண்டும். சிறப்பான பந்துகள் வீசப்பட்டால், அந்த அணி வீராங்கனைகள் திணறி வருவதை பார்க்க முடிகிறது. இன்றைய போட்டியில் இரு அணி வீராங்கனைகளும், தங்கள் தரப்பு குறைகளை சரிசெய்து, வெற்றி பெற முனைப்பு காட்டுவார்கள் என்பதால், சுவாரசியத்துக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம்.

களம் காணவுள்ள வீராங்கனைகள்
இந்தியா: ஹர்மன்பிரித் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி சர்மா, ஸ்நேஹ் ராணா, ஜெமிமா ரோட்ரிகஸ், ஷபாலி வர்மா, ஹர்லீன் தியோல், அமன்ஜோத் கவுர், அருந்ததி ரெட்டி, கிரந்தி கவுட், ரேணுகா சிங், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கமாலினி, சரணி, வைஷ்ணவி சர்மா.

இலங்கை: சமாரி அத்தப்பட்டு (கேப்டன்), ஹாஸினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்சிதா சமரவிக்ரமா, நிலக்சிதா டி சில்வா, கவிஷா தில்ஹரி, இமேஷா துலானி, கவுசினி நுத்யங்கனா, மல்ஷா ஷேஹானி, இனோகா ரணவீரா, ஷாஷினி ஜிமானி, நிமேஷா மதுஷானி, காவ்யா கவிந்தி, ராஷ்மிகா செவ்வந்தி, மால்கி மதாரா.

Related Stories: