ஜேக்கப்பின் மந்திர பந்துகளில் பேக்கப் ஆன வெ.இண்டீஸ்: 323 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது

மவுங்கானுய்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி, 323 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. ஏற்கனவே முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து, ஒரு போட்டியில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இந்த அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மவுங்கானுய் நகரில் கடந்த 18ம் தேதி நடந்தது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 575 ரன்களும், அதற்கு பதிலடியாக வெஸ்ட் இண்டீஸ் 420 ரன்களும் எடுத்தன. பின்னர், 4ம் நாளான நேற்று முன்தினம் 2ம் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்தின் துவக்க வீரர்கள் கேப்டன் டாம் லாதம், டெவான் கான்வே சதங்கள் விளாசியதை அடுத்து, நியூசிலாந்து அணி, 2 விக்கெட் இழப்புக்கு 306 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

அதையடுத்து, 2ம் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் 4ம் நாளின் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் கடைசி நாளான நேற்று, வெஸ்ட் இண்டீஸ், 419 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவக்கியது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் வெஸ்ட் இண்டீசின் துவக்க வீரர்கள் பிராண்டன் கிங் 67 ரன்னிலும், ஜான் கேம்ப்பெல் 16 ரன்னிலும் வீழ்ந்தனர். நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி (5 விக்கெட்) மந்திரப் பந்துகளை அற்புதமாக வீசி திணறடித்ததால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. கடைசியில், 80.3 ஓவரில், வெஸ்ட் இண்டீஸ் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதனால், 323 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக, இரு போட்டிகளிலும் சதம் விளாசிய டெவான் கான்வே தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக, மொத்தத்தில் 23 விக்கெட்டுகள் சாய்த்து சாதனை படைத்த ஜேக்கப் டஃபி தேர்வானார்.

Related Stories: