கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம்

 

தேனி, மார்ச் 15: தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு பணியாளர் குறைதீர் கூட்டம் நடந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவை 2024-25 வரவு செலவு திட்டம் அறிக்கையில் 27.6.2024 அன்று நடைபெற்ற கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் அறிவிப்பு எண் 3ல் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பணியாளர்கள் குறைகளை தீர்த்திடும்வகையில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மண்டல இணைப்பதிவாளர் தலைமையில் முகாம் நடத்தப்பட்டு குறைகள் தீர்க்கப்படும் என அறிவித்தார்.

இந்த அறிவிப்பின்படி, தேனியில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான குறைதீர் முகாம் நடந்தது. முகாமிற்கு தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தலைமை வகித்தார். இதில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் சங்கத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர். மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இம்முகாமில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் மற்றும் சரக துணைப் பதிவாளர்கள் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post கூட்டுறவு பணியாளர் குறைதீர் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: