தஞ்சாவூர், மார்ச்15: தஞ்சை பழைய கோர்ட்டு சாலை நடைபாதையில் சேதமடைந்த தடுப்புக் கம்பியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை பழைய கோர்ட்டு சாலையில் அருங்காட்சியகம், கட்டிடம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதிலும் இந்த சாலையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் பாதசாரிகளுக்கு என அமைக்கப்பட்ட நடைபாதை வழியாக மற்ற இடங்களுக்கு நடந்து சென்று வருகின்றனர்.
நகரின் முக்கிய இடங்களை இணைக்கும் பிரதான வழித்தடம் என்பதால் இந்த சாலையில் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இந்த நிலையில் நடைபாதையின் தடுப்பு கம்பி நீண்ட நாட்களாக சேதம் அடைந்து காணப்படுகிறது.
இதனால் நடைபாதையின் வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. எனவே ஏதும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை பார்வையிட்டு நடைபாதையின் தடுப்பு கம்பியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post தஞ்சை பழைய கோர்ட் சாலையில் சேதமடைந்து கிடக்கும் நடைபாதை தடுப்புக் கம்பி appeared first on Dinakaran.
