அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தோல் அல்லாத காலணி உற்பத்தி துறையில் நாட்டிலேயே அதிக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்திட்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இந்த உற்பத்தித் துறையில் இவ்வருடம் 10,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் மதுரை மாவட்டம் மேலூரிலும், 10,000 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் கடலூரிலும் இரண்டு காலணி தொழிற்பூங்காக்கள் ரூ.250 கோடியில் அமைக்கப்படும். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலணி திறன் பயிற்சி மையம் ஒன்றை சிப்காட் நிறுவனம் நிறுவிடும்.
தமிழ்நாட்டை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக நிறுவிட ‘தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை 2025’ ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும். கப்பல் மற்றும் படகு வடிவமைப்பு மற்றும் கப்பல் சட்டகம் கட்டுருவாக்கம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தி ஆகிய துறைகளில் முதலிடு மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கங்களைக் கொண்டு இப்புதிய கொள்கை அமைந்திடும் இந்தத் தொழிலின் வருகையின் மூலம் கடலூர் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 30000 வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை வளர்ச்சிக்கும் இக்கொள்கை வித்திடும்.
உயிரி தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. உயிரி தொழில்நுட்ப சூழலமைப்பை ஊக்குவிப்பதற்காகவும் உயிரியல் மருந்து மற்றும் நோய் தீர்வியல் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தவும். அதிநவீன உயிர் அறிவியல் பூங்கா ஒன்று சென்னைக்கு அருகில் உருவாக்கப்படும். இந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில்துறையில் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வருகிறது. தேசிய ஏற்றுமதியில் 33 சதவித பங்களிப்புடன் இந்தியாவின் மிகப்பெரும் மின்னணுப் பொருட்களுக்கான ஏற்றுமதிச் சூழல்கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 2020-21ம் ஆண்டில் 1.66 பில்லியன் டாலராக இருந்த மாநிலத்தின் மின்னணு ஏற்றுமதி 2023-24ம் ஆண்டில் 9.56 பில்லியன் டாலராக அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது.
மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை பெற்றிட பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. அதன் அடுத்தகட்டமாக, தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம்-2030 எனும் ஐந்தாண்டுகாலத் திட்டம் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.
செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மையம் ஒன்று சென்னையில் முன்னணி தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். உலக அளவில் தலைசிறந்த செமி கண்டக்டர் வடிவமைப்பு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுப் புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் வடிவமைப்பு மையங்களை தமிழ்நாட்டில் அமைத்திட ஊக்கம் அளிக்கப்படும். கோவை-குலூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவிலும், பல்லடம் அருகே 100 ஏக்கர் பரப்பளவிலும் செமி கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திரத் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தைவானிய நிறுவனங்கள் இணைந்து அமைக்கவிருக்கும் இந்தத் தொழிற்பூங்காக்கள் கோவை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
அலையாத்திக் காடுகள் பாதுகாப்பு நவீன மீன்பிடி நடைமுறைகள் அறிமுகம் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் கடல்சார் வள அறக்கட்டளை ரூ.50 கோடி தொடக்க நிதியுடன் உருவாக்கப்படும். கடல் நீரின் தரம், சுற்றுச்சூழல் கல்வி, பொது சுற்றுச்சூழல் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் சேவைகள் ஆகிய நான்கு பெரும் பிரிவுகளின் கீழ் உள்ள 33 வெவ்வேறு தகுதிகளைக் கொண்டிருக்கும் கடற்கரைகளுக்கு வழங்கப்படும் நீலக்கொடி சான்றினை 2025-26ம் ஆண்டில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில் உள்ள திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புதுப்பட்டு மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்பேட்டை ஆகிய 6 கடற்கரைகள் பெற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். காற்று மாசுபாட்டையும் கார்பன் தடங்களையும் குறைத்திடும் நோக்கில் மாநிலப் போக்குவரத்துக் கழகங்களின் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைப்பு செய்திட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய நிதியைக் கொண்டு 70 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே, அதிக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமையப்பெற்ற மாநிலங்களில், லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவுகளுடன் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் 10 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 25 லட்சம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் பயன்பெறும் வகையில், இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம், விழுப்புரம் மாவட்டம் சாரம் மற்றும் நாயனுர், கரூர் மாவட்டம் நாகம்பள்ளி, திருச்சி மாவட்டம் -சூரியூர், மதுரை மாவட்டம் கருத்தபுளியம்பட்டி, ராமநாதபுரம் மாவட்டம் தனிச்சியம், தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டம்-நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் மொத்தம் 398 ஏக்கர் பரப்பளவில் ரூ. 366 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டைகள் தமிழ்நாடு சிறுதொழில் முன்னேற்றக் கழகத்தால் (சிட்கோ) உருவாக்கப்படும். இதன் மூலம் சுமார் 17,500 நபர்கள் வேலை வாய்ப்பினைப் பெறுவர்.
உயர்நுட்ப வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஏற்படுத்திட வகை செய்யும் பொருட்டு, சென்னையில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் ஒரு திறன்மிகு மையம் ரூ. 50 கோடியில் உருவாக்கப்படும். அதனைத் தொடர்ந்து, அதன் துணை மையங்கள் கோயம்புத்தூர், திருச்சி மதுரை சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் கல்வி நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுடன் இணைந்து 3 ஆண்டுகளில் படிப்படியாக உருவாக்கப்படும். தகவல் தொழில்நுட்பத் துறையில் செயல்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இணைய சேவைகள் மற்றும் தரவுக் கட்டமைப்புகளுக்காக பெருமளவில் மூலதனம் தேவைப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு iTNT மற்றும் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத்தில் பதிவு செய்துள்ள புத்தொழில் நிறுவனங்கள் தரவு மைய சேவைகளை எளிதில் பெறும் பொருட்டு தலா ரூ. 5 லட்சம் வரையிலான தரவு மைய சேவைகளுக்கான வில்லைகளை வழங்கிடும் திட்டம் ரூ. 10 கோடியில் தமிழ்நாடு புத்தொழில் தரவு மைய சேவைத் திட்டம்’ என்ற பெயரில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும். இந்த வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு ரூ. 13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுத்துறை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மீன் இறங்கு தளம், மீன்பிடி வலை பின்னுதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்படும். இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் நலன் கருதி, இலங்கையில் நெடுங்காலமாக மீட்க இயலாத நிலையில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளுக்கு நிவாரண தொகை ரூ.8 லட்சம் உயர்த்தி வழங்கிடவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு படகுகளுக்கான நிவாரண தொகை ரூ.2 லட்சம் உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் வாடும் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட ரூ.350 தின உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழக அரசின் பட்ஜெட்டில் 2025-26: தொழில்துறைக்கு ரூ.3,915 கோடி ஒதுக்கீடு; ரூ.250 கோடியில் கடலூர், மேலூரில் காலணி தொழிற்பூங்கா appeared first on Dinakaran.