கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3.54 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசு ரூ.3.54 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். இருப்பினும், இதற்கான நிதி எங்கிருந்து கிடைக்கப்பெறும் என்றும் தெரியவில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு நிறைவேற்றப்படாத திட்டங்கள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக நீட் தேர்வு ரத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும், சமயல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும், டீசல் விலை குறைவு, மின்கட்டணம் ஒவ்வொரு மாதமும் கணக்கீடு செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன.

கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் தொகை ரூ.3.54 லட்சமாக அதிகரித்துள்ளது. இதுமட்டுமின்றி, அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை திமுக பின்பற்றுகிறது. புதிய அறிவிப்புகள் ஏதுவும் இந்த பட்ஜெட்டில் இல்லை.
2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி புதிய திட்டங்களை அறிவித்துள்ளார்கள். ஆனால், அத்தனை திட்டங்களையும் மீதம் உள்ள ஒரு ஆண்டில் செயல்படுத்த முடியாது. ஏற்கனவே உள்ள திட்டங்களையே கடன் வாங்கிதான் செயல்படுத்த முடியும். இந்த சூழலில் புதிய திட்டங்களை எப்படி செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கடந்த 4 ஆண்டுகளில் ரூ.3.54 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: