டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகையிட முயன்ற அண்ணாமலை, வானதி, தமிழிசை அதிரடி கைது: தடையை மீறியதால் சென்னை போலீஸ் நடவடிக்கை

சென்னை: போலீசாரின் தடையை மீறி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளைபோலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். டாஸ்மாக் நிறுவனத் தில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக பாஜ சார்பில் நேற்று எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்து இருந்தனர். இதற்கிடையே ராஜரத்தினம் மைதானம் அருகே பாஜவினர் ஒன்று கூடியதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை தனது பனையூரில் உள்ள வீட்டில் இருந்து போராட்டத்திற்கு புறப்படும் போது போலீசார் அண்ணாமலையின் வாகனத்தை தடுத்த நிறுத்தி கைது செய்தனர். அதேபோல் பாஜ மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்படும் போது கைது செய்யப்பட்டார். பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசனை எழும்பூர் பாத்தியன் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தபோது வாக்குவாதம் செய்ய முயன்றார்.

அப்போது அந்த அதிகாரி, வாக்குவாதம் செய்தால், அரசு அதிகாரியை பணிசெய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு பதிவு செய்யப்படும் என எச்சரித்தார். அதனை தொடர்ந்து வானதி சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். இதேபோல் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கருநாகராஜன், சரஸ்வதி உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டம் அறிவிக்கப்பட்ட இடத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அப்படி இருந்தும் போராட்டம் நடத்த பாஜகவினர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகே குவிந்தனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட அண்ணாமலை உள்ளிட்டோர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

* நாய் ஏத்துற வண்டியில் நான் ஏறமாட்டேன்: எச்.ராஜா பிடிவாதம்
போராட்டம் நடத்த முயன்ற பாஜ மூத்த தலைவர் எச்.ராஜாவை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். அப்போது எச்.ராஜா ‘நாய் ஏத்துற வண்டியில் நாங்க ஏன் ஏறணும்… நாங்க ஏறமாட்டோம் என்று பிடிவாதமாக வாகனத்தின் நுழைவுவாயிலில் நின்ற படி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் போலீசார் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே “இது காவல்துறை வாகனம்தான் சார் ஏறுங்கள்” என்று கூறி வலுக்கட்டாயமாக அவரை ஏற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகையிட முயன்ற அண்ணாமலை, வானதி, தமிழிசை அதிரடி கைது: தடையை மீறியதால் சென்னை போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: