நாகர்கோவில் : வீட்டில் இருந்தே டயாலிசிஸ் செய்யும் பெரிடோனியல் டயாலிசிஸ் முறை குமரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மாதம் ₹40 ஆயிரம் மதிப்புள்ள சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.
உலக சிறுநீரக தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பொதுமக்களுக்கு சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலையில் கருத்தரங்கம் நடந்தது.
மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ராமலட்சுமி தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் கிங்ஸ்லி ஜெபசிங், உறைவிட மருந்துவ அலுவலர் ஜோசப் சென், மருந்தியல் துறை தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், சிறுநீரகவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் அருண் வர்க்கீஸ், துணை முதல்வர் டாக்டர் சுரேஷ்பாலன், உதவி உறைவிட மருந்துவர்கள் விஜயலட்சுமி, ரெனி மோள், டாக்டர் ஜெயலால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் சிறுநீரகவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் அருண் வர்க்கீஸ் பேசியதாவது: சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு மூன்று முறையான சிகிச்சைகள் உள்ளன. அவை ஹீமோ டயாலிசிஸ், பெரிடோனியல் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.
பெரும்பாலானவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை மருத்துவமனை சென்று ஹீமோ டயாலிசிஸ் சிகிச்சை செய்து கொள்கின்றனர். வாரத்திற்கு இரண்டு முறை மருத்துவமனை செல்வதால் அதிக நேர செலவும், பொருட்செலவும் ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக வீட்டில் இருந்தே டயாலிசிஸ் செய்யும் பெரிடோனியல் டயாலிசிஸ் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் இலவசமாக இது செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் வாரம் இருமுறை ஹீமோ டயாலிசிஸ் செய்ய சிரமமாவதால் வீட்டில் இருந்தே செய்யும் பெரிடோனியல் டயாலிசிஸ் பலனாக இருக்கிறது. சிறுநீரகங்களை பாதுகாக்க தினமும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும். அதிக அளவு உப்பை உணவில் தவிர்த்து ஆரோக்கியமாக இயற்கை உணவை உண்ண வேண்டும்.
தினமும் குறைந்தது 2 முதல் 3 லிட்டர் அளவு தண்ணீர் அருந்த வேண்டும். ரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை முறையாக பரிசோதித்து அதிகமாக இருந்தால் அவற்றை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். புகைபிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி வலி நிவாரண மருந்துகளை உட்கொள்ள கூடாது.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், இருதயநோய் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் யாரேனும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தால் சிறுநீரக பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வருடம் ஒருமுறை யூரியா மற்றும் கிரியாட்டின், சிறுநீரில் புரதம் வெளியேறுதலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மாதம்தோறும் 1700 செசன் டயாலிசிஸ் இம்மருத்துவமனையில் செய்யப்படுகிறது. 200 பேர் மாதம்தோறும் டயாலிசிஸ் செய்ய வருகின்றனர். புறநோயாளிகள் மாதம்தோறும் 1000 பேர் ஆரம்பநிலை சிறுநீரக பாதிப்பு நோயாளிகள் சிகிச்சைக்கு இங்கு வருகின்றனர். வீட்டில் இருந்து டயாலிசிஸ் என்பது இதனை வெளியில் செய்வது மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் செலவாகும். அரசாங்கம் அந்த சிகிச்சையை இலவசமாக வழங்குகிறது.
அந்த வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வீட்டில் இருந்தே டயாலிசிஸ் செய்யும் வசதியை நாம் செய்து கொடுத்து வருகிறோம். 5 பேருக்கு தற்போது முதல்கட்டமாக வழங்கப்படுகிறது. மாதம் ஒரு நோயாளிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்வில் உலக சிறுநீரக தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பெரிடோனியல் டயாலிசிஸ்
சிஏபிடி எனப்படும் பெரிடோனியல் டயாலிசிஸ் செய்முறையில் வயிற்று பகுதியில் உள்ள பெரிட்டோனியம் ஒரு வடிகட்டி போன்று செயல்படுகிறது. இதில் ஒரு சிறிய வடிகட்டி மூலம் வயிற்று பகுதியில் ஊட்டச்சத்து திரவம் உடலில் செலுத்தப்படுகிறது. இந்த ஊட்டச்சத்து திரவம் வேலை செய்து உடலின் கழிவுகள் மற்றும் நீரை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
இந்த செயல்முறை எளிதில் செய்யக்கூடியதால் மருத்துவமனை செல்ல வேண்டியது அவசியம் இல்லாமல் வீட்டு சூழலில் அமைதியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இதனால் நோயாளிகள் மன அமைதி பாதுகாக்கப்படுகிறது.
ஊசியில்லா வலியில்லா சிகிச்சை கிடைக்கப்பெறுகிறது. ரத்த சுத்திகரிப்புடன் ஒப்பிடும் போது இந்த சிகிச்சை முறையில் உணவு கட்டுப்பாடு குறைந்த அளவு போதுமானது. நோயாளிகள் சுதந்திரமாக உணர முடிகிறது.
சிறுநீரக செயல் இழப்பு ஏன்?
சிறுநீரக செயலிழப்பு ஏற்படுத்த முக்கிய காரணங்கள் சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் ஆகும். இது தவிர சிறுநீரக கற்கள், வலி நிவாரண மருந்துகளை உட்கொள்ளுதல், சிறுநீரக அழற்சி போன்றவற்றாலும் சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம்.
சிறுநீரக பாதிப்பில் ஐந்து நிலைகள் உள்ளன. இதில் முதல் மற்றும் 2ம் நிலையில் கண்டுபிடித்தால் மட்டுமே சிறுநீரக நோயை குணப்படுத்த முடியும். முதல் இரண்டு நிலைகளை தாண்டி நோயை கண்டு பிடித்தால் நோயை கட்டுப்படுத்தி பின்னர் டயாலிசிஸ் செய்ய தேவைப்படலாம்.
எனவே முதல் இரண்டு நிலையில் நோயை கண்டுபிடிக்க வருடம் ஒருமுறை பரிசோதனை செய்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வருடம் ஒருமுறை ரத்தத்தில் கிரியேட்டின் அளவு, சிறுநீரில் புரதம் வெளியேறுதல் அதாவது மைக்ரோ அல்புமின் அளவு பரிசோதனைகளை செய்தால் மட்டுமே சிறுநீரக பாதிப்பை ஆரம்ப நிலையில் குணப்படுத்த முடியும்’.
The post ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தில் அறிமுகம் குமரியில் வீட்டில் இருந்தே டயாலிசிஸ் செய்யலாம் appeared first on Dinakaran.