* மீண்டும் ஏலம் விடப்படுமா?
* கலெக்டர் நடவடிக்கை வேண்டும்
மண்டபம் : மண்டபம் அருகே சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு வருவாய் ஈட்டி தரும் அரியமான் பீச்சுக்கு செல்லும் வழியில், வாகன நுழைவு கட்டண மையம் முடங்கி கிடக்கிறது. இதனால் ரூ.15 லட்சம் வரை ஊராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதால், டோல்கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டபம் அருகே சாத்தக்கோன்வலசை ஊராட்சி பகுதியில், ராமநாதபுரம் முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, 3 கிலோ மீட்டர் தொலைவில் அரியமான் கடற்கரை அமைந்துள்ளது. இது வனத்துறை பகுதியில் இருப்பதால் வனத்துறை நிர்வாகம் பராமரித்து வருகிறது. இங்கு வருகை தரும் சுற்றுலாவாசிகளை கவரும் வகையில் கடலில் செல்ல சுற்றுலா படகு உள்பட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
அதுபோல ஆண்டுதோறும் அரிமான் கடற்கரையை பிரபலப்படுத்தும் விதமாக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதனால் தமிழக பகுதியில் இருந்து சாலை வழியாக தனி வாகனத்தில் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலாவாசிகள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் இந்த அரியமான் கடற்கரை வந்து கடலில் நீராடி பொழுதுபோக்கி செல்கின்றனர்.
மேலும் அரியமான் பீச்சுக்கு தினமும் மற்றும் விடுமுறை நாட்களில் அரியமான் பகுதியை சுற்றி உள்ள மண்டபம் முதல் ராமநாதபுரம் வரை உள்ள பொதுமக்கள், சுற்றுலாவாசிகள் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அரிமான் பீச்சை மேம்படுத்துவதோடு, சாத்தக்கோன்வலசை ஊராட்சிக்கு வருவாயை ஏற்படுத்தும் விதமாக வாகனத்தில் வருவோருக்கு நுழைவு கட்டணம் மையம் அமைக்கப்பட்டது. அது தனியாருக்கு குத்தகை கொடுத்து ஊராட்சி நிர்வாகம் வசூல் செய்து வந்தது. அதனால் ஊராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வருவாய் கிடைத்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் குத்தகை முடிந்து ஊராட்சி சார்பில், புதிதாக ஏலம் விடப்பட்டது. ஏலம் எடுத்தவர்கள் ஊராட்சி நிர்வாகம் கொடுத்த குறிப்பிட்ட காலக்கெடுவில் பணம் கட்டாமல் விட்டனர். ஊராட்சி சார்பாக மறு குத்தகைக்கு ஏலம் விடாமல் நுழைவு கட்டண மையம் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் ஊராட்சிக்கு கிடைக்க வேண்டிய ரூ.15 லட்சத்திற்கு மேல் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. ஆதலால் ஊராட்சிக்கு வருவாயை ஈட்டுத்தரும் வகையில் மீண்டும் அரியமான் பீச்சுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள வாகன நுழைவு கட்டண மையத்தை குத்தகைக்கு விட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தக்கோன் வலசை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் வசித்து வரும் பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட குப்பைகள் மற்றும் சாலை ஓரத்தில் விளக்கு எரிய விடுதல். குடிநீர் வசதி பராமரிப்பு போன்றவைகளுக்கு செலவின தொகையாக பயன்படுத்தலாம்.
இதற்கு அரியமான் பீச் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட் மீண்டும் ஏலம் விட்டு, ஊராட்சிக்கு வருவாயை ஏற்படுத்துவதற்கு கலெக்டர் நேரடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுக்க வேண்டும்.
சாத்தக்கோன் வலசை ஊராட்சியில் அமைந்துள்ள அதியமான் பீச்சுக்கு செல்லும் வழியில் வாகன நுழைவு கட்டணம் ஏலம் விடுவதால் ஊராட்சிக்கு அதிக வருமானம் கிடைக்கும். ஆதலால் ராமநாதபுரம் எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், பேச்சுவார்த்தை நடத்தி வாகன நுழைவு கட்டணத்தை குத்தகைக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சிக்கு பெரும் தொகையை வருவாயாக ஈட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு சமீபகாலமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருள்கள் கடத்திச் செல்வது அதிகமாக நடந்து வருகிறது. அதுபோல அதியமான் சவுக்கு மரங்கள் நிறைந்து உள்ளது.
இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் குற்றச்செயல்களும் அதிகமாக நடைபெறும். மேலும் காவல்துறையின் பார்வையில் அரியமான் பீச் பகுதி இல்லாமல் உள்ளது.
இதனால் சாலையின் அருகே அமைந்திருப்பதால் வாகனத்தில் இந்த பகுதிக்கு கடத்தல் பொருள்களை கொண்டு வந்து நாட்டு படகு மூலம் இலகுவாக கடத்தி செல்லும் இடமாக கடத்தல்காரர்களுக்கு அரியமான பீச் அமைந்துள்ளது. ஆதலால் இந்த பகுதியில் வாகன நுழைவு கட்டண மையம் அமைப்பது பாதுகாப்பிற்கு முக்கிய அம்சமாக உள்ளது.
குற்றச்செயல்களை தடுக்க முடியும்
டோல்கேட் ஏலம் விடுவதால் பணியாளர்கள் எந்த நேரமும் இருப்பார்கள். அதுபோல கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் இந்த கட்டண மையம் வழியாக சாலையில் செல்லும் வாகனங்களை பதிவு செய்யும் பட்சத்தில் இலகுவாக காவல்துறையினர் கண்காணிக்க வசதி இருக்கும். அப்போது கடத்தல்காரர்கள் இந்த பகுதியில் செல்வது மிக கடினமாக இருக்கும். கடத்தல்,குற்றச்செயல்களை தடுப்பதற்கு இந்த வாகன நுழைவு கட்டண மையம் பெரும் உதவியாக இருக்கும்.
அதுபோல பீச்சுக்கு வருகை தரும் சுற்றுலாவாசிகள் போல் சமூக விரோதிகள் வருவதை தடுக்கவும் உதவியாக இருக்கும். அதனால் இந்த டோல்கேட் அமைப்பது பாதுகாப்புக்கு ஒரு முக்கிய அம்சமாக அமையும் என்பதால், டோல்கேட்டை மறு ஏலம் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அரியமான் டோல்கேட் முடக்கம் பணம் கட்டாமல் பல லட்சம் வருவாய் இழப்பு appeared first on Dinakaran.