*உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை
ஸ்ரீவைகுண்டம் : ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்லாததால் முதியவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சமாதான கூட்டத்தில் உறுதி அளித்தபடி பேருந்துகள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் பொன்னங்குறிச்சி அருகே ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் வழியாகவும், கருங்குளம் வழியாகவும் தாலுகா அலுவலகம் வருவதற்கு பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
பேருந்துகள் தாலுகா அலுவலக நிறுத்தத்தில் நிற்காததால் ஆட்டோக்களுக்கு செலவழித்தும் அதற்கான வசதி இல்லாதவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் சென்று வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட சமாதான கூட்டத்தில், தாலுகா அலுவலகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்லும் என போக்குவரத்து கழகத்தினரால் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த உறுதிமொழிக்கு மாறாக பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தாலுகா அலுவலகத்தில் அரசு பேருந்துகள் நிற்காமல் தொடர்ந்து சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளின் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த பெரும்பாலான விவசாயிகளுக்கு தாலுகா அலுவலகத்தில் பேருந்துகள் நிற்காததால் சிரமங்களை சந்தித்தனர்.
தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் திருத்தம் செய்வதற்காக வந்த மூதாட்டி கருங்குளம் செல்வதற்காக சுமார் 3.45 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தார். 3 அரசு பேருந்துகளுக்கு அவர் சைகை காட்டிய போதும் நிற்காமல் சென்றன.
இதேபோன்று எதிர்புறம் நீண்ட நேரம் ஸ்ரீவைகுண்டம் செல்வதற்காக காத்திருந்த வயது முதிர்ந்த இருவரும் அரசு பேருந்துகள் நிற்காததால் சிரமத்தை சந்தித்தனர். அப்போது அங்கு வந்த அரசு நகரப் பேருந்து கூட நிற்காமல் அவர்களை புறக்கணித்து சென்றது. சமாதான கூட்டத்தில் உறுதியளித்தபடி ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கருங்குளத்தை சேர்ந்த அம்மாச்சி என்ற மூதாட்டி கூறுகையில், ‘ஆதார் கார்டு பதிய வந்தேன். மூன்று பேருந்துகளை நிறுத்தியும் நிற்கவில்லை. பேருந்துகள் நிற்காததால் அவ்வழியாக வந்த உறவினரின் பைக்கில் எனது வயதையும் பொருட்படுத்தாமல் அதில் ஏறி மூன்று பேராக சிரமத்துடன் பயணம் செய்தேன்’ என்றார்.
The post ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்லாததால் முதியோர் தவிப்பு appeared first on Dinakaran.