கடையநல்லூரில் இளம்பெண் மர்மச்சாவு

*தென்காசி கோர்ட்டில் கணவர் சரண்

கடையநல்லூர் : கடையநல்லூரில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த நிலையில் தென்காசி கோர்ட்டில் அவரது கணவர் நேற்று சரணடைந்தார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் செவல்விளை 3வது தெருவைச் சேர்ந்தவர் முருகன் (35). கூலி தொழிலாளி.

இவரது மனைவி செல்வி (30). தம்பதிக்கு ஸ்ரீ (10), பூரண செல்வி (7) என இரு மகள்கள். கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்த செல்வி திடீரென மயங்கி விழுந்து மூச்சின்றி கிடந்தார்.

இதுகுறித்து தெரியவந்த உறவினர்கள், அவரை மீட்டு கடையநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே செல்வி இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து செல்வியின் உடலை வீட்டுக்கு கொண்டுவந்த உறவினர்கள், அவசர அவசரமாக மயானத்திற்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்தனராம்.

இதுகுறித்து தெரியவந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவசர போலீஸ் எண் 100 மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் விரைந்துவந்த கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் போலீசார், செல்வியின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் செல்வியின் கணவரான முருகன், தென்காசி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி பொன்பாண்டி முன்னிலையில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து முருகனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் முருகனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

The post கடையநல்லூரில் இளம்பெண் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Related Stories: