மதுரை, மார்ச் 12: அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி கரும்புடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை 2019-20ம் ஆண்டில் கரும்பு வரத்து இல்லாததால் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனை மீண்டும் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தின் சார்பில் அண்ணா பேருந்து நிலையம் அருகே திருவள்ளுவர் சிலை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கைகளில் கரும்புகளை ஏந்தியவாறு ஆலையை திறக்க வேண்டுமென கோஷமிட்டனர். மேலும், குழு பரிந்துரைத்த ரூ.27 கோடியை உடனே ஒதுக்க வேண்டும். ஆலையில் உப மின் நிலையம் பணிகளை முழுமையாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையில் கரும்பு அதிகாரிகள், களப்பணியாளர்கள் நியமித்து மார்ச் மாதத்திலிருந்து கரும்பு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 சதவிகித பிழிதிறன் கொண்ட கரும்பு ஒரு டன்ணுக்கு ரூ.5,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
The post சர்க்கரை ஆலையை திறக்கக் கோரி கரும்புடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
