துரித உணவகத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

சென்னை: சாலிகிராமம் தியாகராஜ நகரை சேர்ந்தவர் அஜித்குமார்(26). இவர் தனது நண்பர் தமிழ் அமுதன் என்பவருடன் நேற்று முன்தினம், விருகம்பாக்கம் பங்கஜம் சாலையில் உள்ள துரித உணவகத்திற்கு சென்றார். அப்போது அங்கு சாப்பிட்டு முடித்த வாலிபர் ஒருவர் வெகு நேரமாக இருக்கையிலேயே அமர்ந்து இருந்தார். இதை பார்த்த அஜித்குமார் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் எழுந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் அந்த வாலிபருக்கும் அஜித்குமார் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த அந்த வாலிபர் மறைத்து வைத்திருத்த கத்தியை எடுத்து அஜித்குமாரை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். அப்போது கால் தவறி கீழே விழுந்த அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக உதைத்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பிறகு கத்திகுத்தில் காயமடைந்த அஜித்குமாரை அவரது நண்பர் மற்றும் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் அஜித்குமார் அளித்த புகாரின்படி விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்திய போது, கத்தியால் குத்திய நபர் வடபழனி பஜனை கோயில் 2வது தெருவை சேர்ந்த அஜய்குமார் (எ) அஜித் (29) என்றும் இவர் மீது அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அஜய்குமாரை கைது செய்தனர். அவனிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post துரித உணவகத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.

Related Stories: