பல்லாவரம்: பெண்கள் சுதந்திரமாக செயல்பட பெரியார் கருத்துதான் காரணம் என பல்லாவரத்தில் நடந்த மகளிர் தின பொதுக்கூட்டத்தில் மேயர் பிரியா கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட திராவிட இயக்கத்தமிழர் பேரவை சார்பில், உலக மகளிர் தின பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. பெரியாரும், பெண்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
விழாவில் மேயர் பிரியா பேசுகையில், ‘பெரியார் இல்லையென்றால் பெண்கள் இல்லை. நான் மேடையில் பெண்ணாக பேசுகிறேன் என்றால், அதற்கு பெரியார்தான் காரணம். பெரியார் வழியில் திமுகவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிநடத்தி வருகிறார். இன்றைக்கு பெண்கள் சுதந்திரமாக செயல்பட பெரியார் கருத்துகள்தான் காரணம். ஒரு குடும்பத்தில் பெண்கள் கல்வி கற்றால் அந்த குடும்பத்திற்கு பயனாகவும் பெருமையாகவும் இருக்கும்.
தமிழக முதல்வர் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்தததால் இன்று பல பெண்கள் உயர்கல்வி படிக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கு பெரியார் பற்றி எடுத்து செல்ல வேண்டும். பெரியார் பற்றி தெரியாதவர்கள்தான் பெரியார் குறித்து பேசி வருகிறார்கள். தந்தை பெரியார் விதைத்த விதையில் ஒவ்வொரு திட்டமும் தற்போதைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது,’ என்றார்.
நிகழ்ச்சியில் பல்லாவரம் சுற்று வட்டாரப்பகுதிகளில் கபடி, கால்பந்து, கிரிக்கெட் போன்ற பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளுக்கு பதக்கம், பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், திராவிடர் இயக்க தமிழர் பேரவையை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
The post பெண்கள் சுதந்திரமாக செயல்பட பெரியார் கருத்து தான் காரணம்: மேயர் பிரியா பேச்சு appeared first on Dinakaran.
