சனாதனம் குறித்த பேச்சு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்கு தொடரக்கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல ஒழிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு எதிராக மஹாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ரிட் மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி.வில்சன் ஆகியோர், “இந்த விவகாரம் தொடர்பான வழக்கை ஒருவேளை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய முடியவில்லை என்றால், கர்நாடகாவுக்கு மாற்ற வேண்டும்.

குறிப்பாக மிக மோசமான முறையில் விமர்சனம் செய்திருந்த நுபுர் சர்மா, அர்னாப் கோஸ்வாமி ஆகியோர்களின் வழக்குகள் மாற்றம் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் அதனையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து புதிதாக பீகார் உள்ளிட்ட இடங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே அலைக்கழிக்கவும், அரசியல் உள்நோக்கத்தின் அடிப்படையில் தொடரப்பட்டது. எனவே உதயநிதி மீது புதிதாக வழக்கு பதிய தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ உதயநிதிக்கு எந்த நிவாரணமும் வழங்க கூடாது. இதுபோன்ற வெறுப்பு பேச்சு விவகாரத்தில் நீதிமன்றமே எப்ஐஆர் பதிய உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் கூடுதலாக தற்போது ஒன்றும் கூறப்போவது கிடையாது.

மேலும் தகுதியின் அடிப்படையிலும் தற்போது விசாரணை செய்யவில்லை. இருப்பினும் இந்த விவகாரத்தில் உதயநிதி தொடர்ந்த வழக்கிற்கு எதிர்மனுதாரர்கள் அனைவரும் அடுத்த ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பிக்கிறது.  அதனை தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் மனுவுக்கு அடுத்த 15 நாள்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் சனாதனம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக இனிமேல் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்ய கூடாது” என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் இறுதிக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை இந்த விவகாரத்தில் முன்னதாக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post சனாதனம் குறித்த பேச்சு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்கு தொடரக்கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: