மரக்காணம், மார்ச் 5:மரக்காணம் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கி கிடந்தது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி ஆழமான கடற்பகுதி என்பதால் ஆண்டுதோறும் இங்கு இனப்பெருக்கத்திற்காக அபூர்வ கடல் ஆமைகள் மற்றும் டால்பின்கள் வருகின்றன. இந்நிலையில், மார்ச் மாதம் முதல் கடல் மீன்களின் இனப்பெருக்கம் துவங்கும் காலமாகும். இதனால் ஆழ்கடலில் வசிக்கக்கூடிய மீன்கள் கூட மரக்காணம் பகுதி கடலில் கூட்டம் கூட்டமாக செல்வதாக மீனவர்கள் கூறுகின்றனர். மேலும் பருவ கால மாற்றத்தின் காரணமாக உணவு தேடி மீன்கள் இப்பகுதிக்கு அடிக்கடி வந்து செல்கின்றன.
இந்நிலையில் நேற்று காலை மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரையில் இறந்த நிலையில் ஒரு திமிங்கலம் கரை ஒதுங்கி கிடந்தது. இப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பார்த்து சென்றனர். இப்பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை பிரேத பரிசோதனை செய்தபிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும். மேலும் திமிங்கலம் கரை ஒதுங்கிய பகுதியில் இறால் குஞ்சு பொரிப்பக தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இது போன்ற தொழிற்சாலைகளில் இருந்து கடலில் கலக்கப்படும் கழிவுநீர் காரணமாக இறந்திருக்கலாம் அல்லது மீனவர்களின் விசை படகில் அடிபட்டு இறந்திருக்கலாம், என மீனவர்கள் தெரிவித்தனர்.
The post மரக்காணம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் appeared first on Dinakaran.
