பொதுத் தேர்வுகள் தொடக்கம் திருவிழாவில் ஒலிபெருக்கி சத்தத்தை குறைத்து வைக்க வேண்டுகோள்

 

பவானி, மார்ச்4: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் திருவிழாவுக்கு வைக்கப்படும் ஒலி பெருக்கிகளின் சத்தத்தை குறைத்து வைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கல்வியில் மாணவ, மாணவியரின் திருப்புமுனையாக கருதப்படும் 12, 11 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நேற்று (மார்ச்.3-ம் தேதி) தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. அடுத்தடுத்து தேர்வுகள் நடைபெறுவதால் மாணவ, மாணவியர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் தீவிரமாக படித்து வருகின்றனர். அதே வேளையில், ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மாசி மாதத்தில் அதிக அளவில் கோயில் பொங்கல் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதற்காக, மின்விளக்கு அலங்காரங்கள், நீண்ட தொலைவுக்கு ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு ஆடல், பாடல் என திருவிழா களைகட்டி காணப்படும்.

தற்போது தேர்வுக் காலம் என்பதால் ஒலி பெருக்கிகளின் சத்தம், தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியரின் கவனத்தை திசை திருப்பும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், ஒருமுகப்படுத்தி படித்து வரும் நிலையில் கவனச் சிதறலையும் ஏற்படுத்தும்.இதனால், தேர்வில் முழுமையான ஆர்வத்தைக் காட்ட முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, திருவிழாக்களுக்கு கட்டப்படும் ஒலி பெருக்கிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சத்தத்தின் அளவைக் குறைத்து வைக்க வேண்டும்.

தேர்வு மையங்கள், பள்ளிகளுக்கு அருகாமையில் ஒலிபெருக்கிகள் கட்டக்கூடாது. பள்ளிகளுக்கு அருகாமையில் செல்லும் திருவிழா ஊர்வலங்களின்போது மேளதாளங்கள் இசைப்பதை தவிர்க்க வேண்டும். இதன்மூலம், இரவு நேரங்களில் படிக்கும் மாணவ, மாணவியர் இடையூறு இல்லாமல் தேர்வுக்கு தயாராக முடியும். அதிக மதிப்பெண்கள் பெறவும் உதவியாக இருக்கும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post பொதுத் தேர்வுகள் தொடக்கம் திருவிழாவில் ஒலிபெருக்கி சத்தத்தை குறைத்து வைக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: