திருவாரூர், பிப்.27: திருவாரூர் மாவட்டம் பேரளம் ரயில் நிலையத்திலிருந்து வேகன்களை இயக்கக்கோரி தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளில் தினந்தோறும் 2 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவில் வெளி மாவட்டங்களில் பொதுவிநியோக திட்ட அரவை பணிக்காக ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நீடாமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் நெல் மூட்டைகள் மற்றும் அரிசி மூட்டைகளும் அனுப்பி வைக்கும் பணிகள் கடந்த 2 மாத காலமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வழக்கம் போல் பேரளம் ரயில் நிலையத்தில் வேகன்கள் மூலம் நெல் மூட்டைகள் மற்றும் அரிசி மூட்டைகள் அனுப்பும் பணி நடைபெறாதால் இதனை நம்பி இருக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு பலமுறை கோரிக்கை மனுக்கள் வழங்கியும் எவ்வித நடவடிக்கையும் நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் எடுக்காததால் நேற்று ரயில் நிலையம் அருகே தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரளம் குட்செட் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர்வீரபாண்டியன்,மாவட்ட செயலாளர் கஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட பொருளாளர் மாலதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் செல்வம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் சேட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் இன்று முதல் பேரளம் ரயில் நிலையத்திலிருந்து வேகன்கள் மூலம் நெல் மூட்டைகள் மற்றும் அரிசி மூட்டைகள் வெளி மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெறும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
The post திருவாரூர் பேரளம் ரயில் நிலையத்திலிருந்து வேகன்களை இயக்க வலியுறுத்தி சாலை மறியல் appeared first on Dinakaran.
