நெல்லையில் மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

நெல்லை,பிப்.27: மகா சிவராத்திரி விழாவையொட்டி நெல்லையப்பர் கோயில், பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் நான்கு கால சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விடிய விடிய நெல்லையப்பர் கோயிலில் ஆன்மீக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பாவ வினைகளால் உண்டான பிணி, தோஷம், எமபயம் உள்ளிட்டவை நீங்கிட விரதங்களும், வழிபாடுகளும் முக்கியமானவை. அந்த வகையில் சிவனுக்கு உகந்த சிவராத்திரி முக்கியமான விரத நாளாகும். சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து அன்று முழுவதும் விரதம் இருந்து, சிவபுராணம், சிவ அஷ்டோத்திரம் சொல்லி கொண்டிருப்பர். இரவில் சிவன் ேகாயில்களில் தங்கியிருந்து 4 ஜாமங்களில் நடக்கும் பூஜைகளில் பங்கேற்று சிவனை வழிபடுவர்.

வைகுண்ட ஏகாதசிக்கு உரிய பலன்கள் அனைத்தும் மகா சிவராத்திரிக்கும் உண்டு என்பதால் நேற்று காலை முதலே சிவன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு கும்பங்கள் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதைதொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை சுவாமிக்கு நான்கு கால சிறப்பு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் முதல் கால பூஜை இரவு 10 மணிக்கும், 2ம்கால பூஜை இரவு 12 மணிக்கும், 3ம் கால பூஜை அதிகாலை 2 மணிக்கும், 4ம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடைபெற்றது. மகா சிவராத்திரி பூஜையில் சிவனடியார்கள், பக்தர்கள் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர். இதற்காக கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுவாமி, அம்பாள் சன்னதிகளில் பக்தர்கள் இடையூறு இன்றி செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டதால் சிரமமின்றி வழிபட்டனர். சேவா பாரதி சார்பில் நேற்று மாலை 5.30 மணி முதல் சிவனடியார்கள் சிவலிங்க பூஜை நடத்தினர்.

நெல்லையப்பர் கோயில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. மேலும் மாகாளை முன் சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரிவது போன்ற நவதானிய ஓவியம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. நெல்லையப்பர் கோயிலில் அமைந்துள்ள நின்றசீர்நெடுமாறன் கலையரங்கம், காந்திமதி அம்பாள் சன்னதி வளாகத்திலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று மாலை 5.30 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை திருமுறை விண்ணப்பம், ஆன்மீக கலை நிகழ்ச்சி, நாதஸ்வர இசைத்தென்றல், பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதுபோல் இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரை நடந்த ஓம்நமசிவாய என்ற மந்திரம் எழுதும் போட்டியில் சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர். நெல்லையப்பர் மற்றும் பாளை சிவன் கோயில்களில் கோலங்களால் ஆன சிவன் ஓவியம் காலையிலே வரையப்பட்டிருந்தது. மீனாட்சிபுரம் காசி விஸ்வநாதர் கோயிலில் காலையில் சங்காபிஷேக வழிபாடு நடந்தது.

இதேபோல் தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயில், வண்ணார்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில், சந்திப்பு கைலாசபுரம் கைலாசநாதர் கோயில், மேலநத்தம் அக்னீஸ்வரர் கோயில், கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோயில், சந்திப்பு மீனாட்சிபுரம் சிவன் கோயில், பொன்னாக்குடி அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post நெல்லையில் மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: