மதுரை, பிப். 26: இன்று மகா சிவராத்திரி தினத்தை ஒட்டி நேற்று மல்லிகை உள்ளிட்ட பூக்கள் விலை மெல்ல அதிகரித்தது. தேவை அதிகரிப்பிற்கு ஈடாக பூக்கள் வரத்தும் அதிகரித்ததால் விலை உச்சம் தொடவில்லை என்று பூ வியாபாரிகள் தெரிவித்தனர். மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளின் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆன்மிகம் மணக்கும் மதுரையில் இக்கொண்டாட்டம் கூடுதல் குதூகலம் கொண்டிருக்கும்.
மீனாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் கூட்டம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்நாட்களில் பூக்கள் தேவை அதிகரிப்பினால், மதுரை பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை உயரத் தொடங்கியது. இன்று சிவராத்திரி என்ற நிலையில், கடந்த வாரத்தை ஒப்பிடும்போது கூடுதல் விலைக்கு பூக்கள் விற்கப்பட்டன. கிலோ ரூ.700க்குள் விற்று வந்த மல்லிகைப் பூ நேற்று கிலோ ரூ.1300க்கு விற்றது.
மற்ற பூக்கள் விலை விபரம் வருமாறு: பிச்சி ரூ.100, முல்லை ரூ.800, மெட்ராஸ் மல்லிகை ரூ.600, ரோஜா ரூ.250, பட்டன்ரோஸ் ரூ.250, பன்னீர் ரோஸ் ரூ.280, செவ்வந்தி ரூ.80, மரிக்கொழுந்து ரூ.60, சேந்தி ரூ.30, அரளி ரூ.350, தாமரை ஒரு பூ ரூ.30 என விற்பனையானது.
மதுரை மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்க பொருளாளர் முருகன் கூறும்போது, ‘‘மகா சிவராத்திரி விழாவிற்கென பூக்கள் தேவை அதிகரித்திருக்கிறது. அதற்கு ஈடாக பூக்கள் வரத்தும் அதிகரித்ததால் ஓரளவு விலை உச்சம் தொடாமல் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலத்தில் பூக்கள் விலை குறைந்து வந்தது. இந்த மகா சிவராத்திரி தினத்தால் மெல்ல பூக்கள் விலை உயர்ந்துள்ளது’’ என்றார்.
The post மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1300க்கு விற்பனை appeared first on Dinakaran.
