ஊத்துக்கோட்டை – திருமழிசை இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.20 கோடியில் சாலை விரிவாக்கம்: 6 மாதத்தில் பணி நிறைவடையும்; அதிகாரிகள் தகவல்

ஊத்துக்கோட்டை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஊத்துக்கோட்டை முதல் திருமழிசை வரை ரூ.20 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 6 மாதத்திற்குள் நிறைவடைந்து சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஊத்துக்கோட்டையைச் சுற்றியுள்ள தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், பனப்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மாவட்ட தலைநகரமான திருவள்ளூர் செல்ல வேண்டுமானால் ஊத்துக்கோட்டை வந்து, அங்கிருந்துதான் செல்ல வேண்டிய நிலை இருந்தது.
அதுமட்டுமல்லாமல், ஆந்திர மாநிலம் புத்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா போன்ற பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ஊத்துக்கோட்டை வழியாக திருவள்ளூர் சென்று அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குச் செல்கின்றன.

இதனால் ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவ்வாறு, பாதிப்புக்குள்ளாகி வரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின்படி, ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் மேம்பாலத்தின் அருகில் இருந்து பெருஞ்சேரி வரை 2.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலையாக சாலை விரிவாக்கம் செய்ய ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, பெருஞ்சேரி பகுதியில் தற்போது சாலை விரிவாக்கத்திற்காக பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 6 மாதத்திற்குள் நிறைவடைந்து சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஊத்துக்கோட்டை – திருமழிசை இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.20 கோடியில் சாலை விரிவாக்கம்: 6 மாதத்தில் பணி நிறைவடையும்; அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: