சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் வந்த அமெரிக்க இளம்பெண்: பயணத்தை ரத்து செய்து அதிகாரிகள் விசாரணை

பூந்தமல்லி: சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் இருந்து நேற்று மதியம், மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்லும் மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், புறப்பட தயாராகி கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடமைகளை, சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜெசிக்கா எமிலியா (34) என்ற பெண், சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு இந்த விமானத்தில் செல்ல வந்திருந்தார்.

அவரை, பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தபோது, அவரது கைப்பைக்குள் ஜிபிஎஸ் கருவி இருப்பதை கண்டுபிடித்தனர். இந்திய விமான பாதுகாப்பு சட்ட விதிமுறைகளின்படி, ஜிபிஎஸ் கருவியை விமானத்தில் பயணம் செய்பவர் எடுத்துச் செல்லக்கூடாது. எனவே, பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்தனர். அதோடு அமெரிக்க பயணியிடம் விசாரித்தனர்.அந்த அமெரிக்க பெண் பயணி, கப்பல் நிறுவனம் ஒன்றில், மென் பொறியாளராக பணியில் இருக்கிறார். இம்மாதம் 2ம் தேதி அமெரிக்காவிலிருந்து, துபாய் வழியாக சுற்றுலா பயணியாக சென்னை வந்துள்ளார்.

இங்கு மாமல்லபுரம், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று விட்டு, இப்போது கோலாலம்பூர் வழியாக அமெரிக்கா செல்ல வந்தது தெரியவந்தது. விசாரணையில் அமெரிக்க பெண் பயணி, எங்கள் நாட்டில், ஜிபிஎஸ் கருவி விமானத்தில் எடுத்து செல்வதற்கு எந்த தடையும் இல்லை. அதோடு நான் அமெரிக்காவிலிருந்து வரும்போது இந்த ஜிபிஎஸ் கருவியை எடுத்துக்கொண்டு தான், விமானங்களில் வந்தேன். சென்னை உள்ளிட்ட எந்த விமான நிலையத்திலும் அப்போது, என்னை சோதனை போட்டு, ஜிபிஎஸ் கருவி எடுத்துச் செல்ல இந்தியாவில் தடை உள்ளது என்று கூறவில்லை என்று கூறினார்.

ஆனால் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அமெரிக்க பெண் பயணியின் விளக்கத்தை ஏற்க மறுத்து, அவருடைய விமான பயணத்தையும் ரத்து செய்தனர். அதன் பின்னர் அமெரிக்கப் பெண் பயணி, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியையும், மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த சில மாதங்களில், இதை போல் சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி எடுத்துச் சென்றதாக இதுவரை சுமார் 6 பயணிகளை, இதைப்போல் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து அவர்கள் பயணத்தை ரத்து செய்து, ஜிபிஎஸ் கருவிகளையும் பறிமுதல் செய்து, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

அப்போதெல்லாம் போலீசார் பயணிகளிடம் விசாரணை நடத்தி விட்டு, அவர்களிடம் எழுதி வாங்கிவிட்டு அதன் பின்பு அவர்களை வேறு விமானங்களில் பயணம் செய்ய அனுமதித்து வந்தனர். அதைபோல் இந்த அமெரிக்க பெண் பயணி விவகாரத்திலும், போலீஸ் விசாரணையில், அவர் ஒரு நிறுவனத்தில் மென்பொறிரயாளராக, கவுரவமான பொறுப்பில் உள்ளார். அதோடு அவரிடம் ஜிபிஎஸ் கருவிக்கான அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளன. எனவே அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு, அனுப்பி வைக்கப்படுவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

The post சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் வந்த அமெரிக்க இளம்பெண்: பயணத்தை ரத்து செய்து அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: