புழல்: கதிர்வேடு பகுதியில் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் கத்தியுடன் சுற்றித் திரிந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புழல், லட்சுமிபுரம், ரெட்டேரி, புத்தகரம், சூரப்பட்டு, கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், காவாங்கரை, சக்திவேல் நகர், பாலாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து புழல் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புழல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேடு மேம்பாலத்தின் அருகில் புழல் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மின்னல் வேகத்தில் வந்த இரண்டு பைக்குகளை தடுத்து நிறுத்தியபோது நிறுத்தாமல் தப்பிச் சென்றனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் விரட்டிச் சென்று பைக்குகளையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு பட்டா கத்திகள் இருந்தது தெரிய
வந்தது.
இவற்றை பறிமுதல் செய்து பைக்கில் வந்த நான்கு பேரையும் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை செய்ததில், அவர்கள் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரஞ்சித் (29), கொடுங்கையூரைச் சேர்ந்த அஜீத் (28), இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பழனி (66) மற்றும் அன்பரசன் (18) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. பூந்தமல்லியில் உள்ள ஒருவரை கொலை செய்ய கத்தியுடன் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கொலை செய்ய சதித்திட்டம் கத்தியுடன் சுற்றிய 4 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.