சென்னையில் இன்று ஆசிய டிரையத்லான்: முதல் முறை நடக்கிறது

சென்னை: சென்னையில் முதல் முறையாக ஆசிய டிரையத்லான் கோப்பை போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. ஆசிய அளவிலான மும்முனை போட்டி என்றழைக்கப்படும் ஆசிய டிரையத்லான் கோப்பை போட்டிகளில் இந்தியா, ஜப்பான், உஸ்பெகிஸ்தான், இந்தோனேஷியா, செக் குடியரசு, அயர்லாந்து உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இவர்களில் 10 பேர் ஜப்பானை சேர்ந்தவர்கள். இந்தியாவின் பல்வேறு நகரங்களை சேர்ந்த 8 பேர் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் சிறப்பு அனுமதி மூலம் விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் ஜப்பான், உஸ்பெகிஸ்தான் நாடுகளை சேர்ந்த அணிகள் பலம் உள்ளவையாக கருதப்படுகின்றன.

வழக்கமான தொலைவை விட, சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பந்தயத் தொலைவு பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 750 மீட்டர் கடலில் நீச்சல், 10 கி.மீ. ஓட்டம், 20 கி.மீ. சைக்கிளிங் என 3 வகையான போட்டிகளில் வெல்ல வேண்டும். நீச்சல் போட்டி ஐ.என்.எஸ். அடையாறு வளாகத்தை ஒட்டிய கடல் பகுதியில் நடைபெறும். ஓட்டப்பந்தயம், சைக்கிளிங் ஆகியவை, சென்னை ராஜாஜி சாலை, காமராஜர் சாலை, சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, அண்ணா சாலை, கொடி மரச்சாலை ஆகியவற்றில் நடக்கும். போட்டிகள் காலையில் 6.30 மணிக்கு துவங்கும் என்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்காது என விளையாட்டுத் துறை நிர்வாகிகளும் போட்டி அமைப்பாளர்களும் கூறியுள்ளனர்.

The post சென்னையில் இன்று ஆசிய டிரையத்லான்: முதல் முறை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: