திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் தெப்பல் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருக்கழுக்குன்றத்தில் பிரசித்திப்பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இங்கு, புகழ் பெற்ற சங்கு தீர்த்த குளம் உள்ளது. ஆண்டுதோறும் தை மாதத்தில் தைப்பூசத்தையொட்டி, சங்கு தீர்த்த குளத்தில் தெப்பல் திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி, நேற்று இரவு சங்கு தீர்த்த குளத்தில் தெப்பல் திருவிழா நடந்தது. அதனையொட்டி, தாழக் கோயிலிலிருந்து வேதகிரீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரியம்மன் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சன்னதி தெரு வழியாக மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து குளத்தில் மலர்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பல் தேரில் அமர்த்தப்பட்டு குளத்தை சுற்றி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இத்திருவிழாவைக் காண திருக்கழுக்குன்றம் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். தெப்பல் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் புவியரசு மற்றும் மேலாளர் விஜயன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இதனிடையே, தொடர்ந்து இன்று மாலை தாழக் கோயில் வளாகத்தில் உள்ள ரிஷப தீர்த்த குளத்தில் தெப்பல் திருவிழா நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நேற்று பௌர்ணமி தினம் என்பதால் வேதகிரீஸ்வரர் மலையை சுற்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ என்ற வேத மந்திரம் முழங்கியவாறு கிரிவலம் வந்தனர்.
The post திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த குளத்தில் தெப்பல் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.