சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து 2வது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்த நிர்வாகத்தை கண்டித்து, தொழிலாளர்கள் 2வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊதிய உயர்வு, சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, கடந்தாண்டு 30 நாட்களுக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், தொழிற்சங்கம் பதிவு செய்யாதது குறித்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் சங்கம் பதிவு செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தொழிலாளர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனிடையே சிஐடியு தொழிலாளர்களை, நிர்வாகம் சிஐடியு சங்கத்திலிருந்து விலக வேண்டுமென அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. இதனால், நிர்வாக தலைவரை கடந்த 31ம்தேதி தொழிலாளர்கள் சந்தித்தபோது, ஒழுங்கு நடவடிக்கை மீறியது, பணி நேரத்தில் பணியில் ஈடுபடாமல் இருந்தது போன்ற காரணங்களால், 3 தொழிலாளர்களை சாம்சங் நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தது. இதை கண்டித்து, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று முன்தினம் காலை முதல் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார், ஆலை நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் என மூன்று தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், சிஐடியு தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்பப்பெற வேண்டும், பழிவாங்கல் நடவடிக்கையை கைவிட வேண்டும். இன்டர்னல் யூனியனில் சேர தொழிலாளர்களை வற்புறுத்த கூடாது போன்ற கோரிக்கைகள் நிர்வாகத்திற்கு முன் வைக்கப்பட்டது. இதற்கு, நிறுவனம் மறுப்பு தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக, 2வது நாளான நேற்று காலை 8 மணி முதல் தொடங்கிய தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் இரவு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களின் சஸ்பெண்ட் ஆணையை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என சிஐடியு தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சாம்சங் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியீடு
சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் உலகளாவிய நடத்தை நெறிமுறையானது. தொழில்முறை மற்றும் மரியாதைக்குரிய பணியிட சூழலை பராமரிப்பதற்கு எதிரான எந்தவொரு நடத்தைக்கும் நிறுவனம் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கொண்டுள்ளது. கேள்விக்குரிய ஊழியர்கள் இந்த நிறுவனத்தின் கொள்கையை மீறியுள்ளனர் மற்றும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், முறையான விசாரணையை தொடர்ந்து தகுந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள், நிறுவனம் எங்கள் தொழிலாளர்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எந்தவொரு ஊழியரையும் தொழிலாளர் குழுவில் சேரவோ அல்லது தொழிற்சங்கத்தை விட்டு வெளியேறவோ கட்டாயப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளது.

The post சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து 2வது நாளாக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: