நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து எவ்வித தொகையும் வசூலிக்கக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை


செங்கல்பட்டு: நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து எவ்வித தொகையும் வசூலிக்கக்கூடாது என கலெக்டர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை நேரடியாக கொள்முதல் செய்ய 106 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. நெல் கிரேடு ‘கி’ குவிண்டாலுக்கு ரூ2450 ம் வீதமும், பொது ரகம் குவிண்டாலுக்கு ரூ2405ம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளது நில உடைமை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று கையடுக்க கருவியில் பதிவு செய்து டோக்கன் அடிப்படையில் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

கொள்முதலுக்காக விவசயிகள் தங்கள் நெல் கொள்முதல் செய்ய எவ்விதமான கட்டணமும் அரசாங்கத்திற்கு வழங்க வேண்டியது இல்லை. நெல் தூற்றி கோணிப்பைகளில் 40 கிலோ எடையில் பிடித்து லாரிகளில் ஏற்றுவது வரையிலான நிகழ்விற்கு தேவைப்படும் நெல் தூற்றும் இயந்திரம், கோணிப்பைகள், கூலி ஆட்களுக்கான கூலியாக ஒரு மூட்டைக்கு ரூ10 மற்றும் போக்குவரத்து செலவின ஆகியவைகள் அரசு மூலம் வழங்கப்படுகிறது. நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் பல்வேறு வீதிமீறல்களை தடுக்கும் பொருட்டு எந்தவொரு நிலையத்திலும் விவசாயிகளிடமிருந்து எவ்வித தொகையும் வசூலிக்கக்கூடாது என்றும், கொள்முதல் செய்யும் நெல்லின் தரம் உறுதி செய்யப்பட்டு ரசீதுகள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்றும், உடனுக்குடன் கிடங்குகளுக்கு அனுப்ப துறைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நேரடி நெல்கொள்முதல் நிலைய புகார்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண். 044-2742 7412, 044-2742 7414 எண்ணிற்கு புகார் அளிக்கலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

The post நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து எவ்வித தொகையும் வசூலிக்கக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: