பொன்னை, ஜன.26: பொன்னை அருகே கீரைசாத்து பகுதியில் விவசாய நிலத்தில் வளர்த்து வந்த சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த கீரைசாத்து கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (67). இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் வரப்பு பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஒரு சந்தன மரத்தை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை தனது நிலத்திற்கு சென்று நீர் பாய்ச்சுவதற்காக பம்ப் செட் ஆன் செய்துவிட்டு வரப்பிலிருந்த சந்தன மரத்தை பார்த்துள்ளார். அங்கிருந்த மரத்தை இரவோடு இரவாக மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து புகாரின் பேரில் பொன்னை சப் இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், விவசாயி சம்பத்திற்கு சொந்தமான சுமார் 2 அடி அகலம் கொண்ட சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளது தெரியவந்தது.
The post பொன்னை அருகே விவசாய நிலத்தில் சந்தன மரம் வெட்டி கடத்தல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.
