இந்திய நாட்டிய விழா கோலாகலம் ஆடல், பாடலுடன் களைகட்டும் மாமல்லபுரம்

மாமல்லபுரம், ஜன.18: மாமல்லபுரத்தில், இந்திய நாட்டிய விழாவை கண்டு ரசிக்க வெளிநாட்டு பயணிகள் வருகையால் மாமல்லபுரம் களைகட்டி காணப்படுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட பல்வேறு புராதன சின்னங்களை சுற்றிப் பார்க்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்திய பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை கண்டு ரசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக, ஒன்றிய சுற்றுலாத் துறை-தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து பல ஆண்டுகளாக நாட்டிய விழாவை டிசம்பரில் தொடங்கி ஜனவரி வரை நடத்தி வருகிறது. இந்த, விழாவானது கடந்த 22ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தினமும், பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று 27ம் நாள் நிகழ்ச்சியில், தர்மபுரி பாரதி கிராமிய கலை வளர்ச்சி மையம் சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி, செங்கல்பட்டு மீனாட்சி பிரியா ராகவன் விநாயகா நாட்டியாலயா குழுவின் பரத நாட்டிய நிகழ்ச்சி, பெங்களூரு ரேகா ராஜூ குழுவின் மோகினியாட்டம் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் கலைஞர்கள் அரங்கேற்றம் செய்தனர். இதில், உள்ளூர் மக்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக வந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்தனர். வரும், 20ம் தேதி இரவோடு நாட்டிய விழா நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

The post இந்திய நாட்டிய விழா கோலாகலம் ஆடல், பாடலுடன் களைகட்டும் மாமல்லபுரம் appeared first on Dinakaran.

Related Stories: