காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது? சரியான நேரத்தில் சரியானது நடக்கும்: சுரங்கப்பாதையை திறந்து வைத்து பிரதமர் மோடி பதில்

சோனமார்க்: காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டுமென அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்திய நிலையில், ‘சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்கும்’ என பிரதமர் மோடி சூசகமாக பதிலளித்துள்ளார். காஷ்மீரில் ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் சோனமார்க் பகுதியில் ரூ.2,700 கோடி செலவில் 6.4 கிமீ தொலைவு கொண்ட சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த இசட் வடிவ சுரங்கப்பாதை மூலம் காஷ்மீருடன் சோனமார்க் ஆண்டு முழுவதும் இணைந்திருந்திருக்கும். எந்த மோசமான வானிலையாலும் சோனமார்க் துண்டிக்கப்படாது என்பதால் சுற்றுலா மேம்படும். இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். விழாவில், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, ‘‘கடந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தில் நீங்கள் (பிரதமர் மோடி) உரையாற்றிய போது, இதயங்களுக்கு இடையேயான தூரம், டெல்லியுடன் ஜம்மு காஷ்மீர் இடையேயான தூரத்தை பற்றி குறிப்பிட்டீர்கள். அதன்படி கடந்த வாரம் காஷ்மீரில் ரயில் முனையத்தை திறந்து வைத்தீர்கள். இப்போது சுரங்கப்பாதையை திறந்து வைத்து இதயத்தின் தூரத்தை மட்டுமல்ல டெல்லியிலிருந்து தூரத்தையும் குறைத்து விட்டீர்கள். அதே போல, காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்தும் உறுதி அளித்துள்ளீர்கள்’’ என்றார்.

அதன் பின் பேசிய பிரதமர் மோடி, ‘‘ஜம்மு காஷ்மீர் நாட்டின் மகுடம். அது அழகாகவும் வளமாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது. இதன் தாக்கத்தை சுற்றுலாவில் நாம் காண்கிறோம். இன்று காஷ்மீர் வளர்ச்சியின் புதிய சரித்திரத்தை எழுதுகிறது. காஷ்மீர் மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நான் நிறைவேற்றுவேன். என்னை நம்புங்கள். எல்லாவற்றுக்கும் சரியான நேரம் இருக்கிறது. சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்கும்’’ என்றார். சுரங்கப்பாதை திறப்பு விழாவை காண சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

The post காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து எப்போது? சரியான நேரத்தில் சரியானது நடக்கும்: சுரங்கப்பாதையை திறந்து வைத்து பிரதமர் மோடி பதில் appeared first on Dinakaran.

Related Stories: