ஏகாதசி விரத மகிமை
மார்கழி மாதமானது உத்திராயணம் என்கின்ற தேவர்களின் பகல் பொழுது காலத்தின் துவக்ககாலமாக அதாவது உத்தராயணத்தின் பிரம்ம முகூர்த்த காலம். அது வழிபாட்டுக்குரிய நேரம் என்பதால் மாதங்களில் நான் மார் கழியாக இருக்கின்றேன் என்று பகவான் கண்ணன் கீதையில் மகிழ்ந்துரை செய்தார். மார்கழி மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் உண்டு. தேய்பிறை ஏகாதசிக்கு உற்பத்தி ஏகாதசி என்று பெயர். வளர்பிறை ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி அல்லது முக்கோடி ஏகாதசி என்று பெயர். விரதங்களில் ராஜவிரதம் என்று ஏகாதசி விரதத்தைச் சொல்வார்கள். இந்த விரதத்தை பகவானே அனுஷ்டிப்பது ராமாயண மகாபாரத இதிகாச புராணங்களில் வருகின்றது. சகல தேவர்களும் இந்த விரதங்களை அனுஷ்டிக்கின்றார்கள். ஏகாதசி விரதத்தின் மகத் துவம் சொல்லில் அடங்காதது. ஒருவருடைய இம்மைத் துயரங்களை நீக்கி மறுமையில் மிகப்பெரிய பதத்தைப் பெற்றுத் தருவது இந்த விரதம்.
மஹாவிஷ்ணுவை எதிர்த்த அசுரன்
வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும் 12 வளர்பிறை ஏகாதசிகளும் 12 தேய்பிறை ஏகாதசிகளும் வரும். சில ஆண்டுகளில் அதிகப்படியாக ஒரு ஏகாதசியும் வரும் இத்தனை ஏகாதசிகளின் ஆரம்பம் மார்கழி மாத தேய்பிறை ஏகாதசியில்தான் தொடங்குகிறது என்பதால் அதனை உற்பத்தி ஏகாதசி என்றார்கள். உற்பத்தி ஏகாதசிக்கு அடிப்படையான கதை முரண் என்கின்ற அசுரனின் கதை. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு இந்த விரதம் தோன்றிய கதையை, எடுத்துரைக்கிறார்.
முரணும் ஏகாதசியும்
சத்யயுகத்தில், சந்திராவதி எனும் நகரத்தை தலைநகரமாகக் கொண்டு, முரண் என்றொரு அசுரன் வாழ்ந்து வந்தான். இந்திர பதவியை பறித்துக் கொண்டு அவனை அடித்து விரட்டி மக்களையும் மிகவும் துன்புறுத்தினான். இத்துன்பத்திலிருந்து விடுபடத் தகுந்த உபாயம் கூறி தங்களைக் காக்கும்படி அனைவரும் மகாதேவரை சரணடைய, அவர் ஹரியை சரணடையுங்கள். அவர் உங்களைக் காத்தருள்வார் என்று யோசனை கூறினார். தேவர்களும் மஹாவிஷ்ணுவிடம் “முரன் என்னும் அசுரன் அதிகமான வர பலம் கொண்டு விளங்குவதால், தேவர்களை விரட்டியடித்துவிட்டு, அசுரர்களை இந்திரன், வருணன், அக்னி, யமன் என பதவிகளில் நியமித்து விட்டான். அவனே சூரியனாகி பூமியைத் தகிக்கிறான். மேகமாகி பேய் மழை பொழிகிறான். இவனிடமிருந்து உலகையும், எங்களையும் காக்க வேண்டும்” என்று வேண்டினர்.
அசுரனுடன் போர்
இதனைக் கேட்ட மஹாவிஷ்ணு, சந்திராவதி பட்டினம் சென்று அசுரனோடு போர் செய்தார். முரனும், ஆக்ரோஷமாக போர் புரியத் துவங்கினான். பகவான் தனது சக்ராயுதத்தினால், அசுரர்களின் அஸ்திர வித்தைகளையும், மாயாஜாலங்களையும் துவம்சம் செய்தார். ஆனாலும் முரண் அசரவில்லை. அஸ்திர பிரயோகங்களுக்குப் பிறகும், அவன் போர் செய்து கொண்டே இருந்தான். தேவர்கள் கொடுத்த வரம் பழுதாகாமல் இருக்க பகவானும் அவனுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். 1000 தேவ ஆண்டுகள் விடாமல் போர் புரிந்தார். ஒரு கட்டத்தில் சிறிது ஓய்வெடுக்க வேண்டி, பத்ரிகாஸ்ரமத்தில் 28 கஜ தூரம் கொண்ட ஒரு துவாரத்துடன் கூடிய ஹேமவதி என்னும் பெயர் கொண்ட குகையில் சென்று சயனத்தில் ஆழ்ந்தார்.
ஏகாதசி தோன்றினாள்
பகவானை தேடிய முரன் வாளை உருவி பகவானை கொல்ல நெருங்கிய போது, மஹாவிஷ்ணுவின் தேகத்திலிருந்து திவ்ய அலங்காரங்களுடன், சகல ஆயுதங்களோடும் ஒரு பெண் தோன்றினாள். நிமிட நேரத்தில் ஓங்கார சப்த கர்ஜனையோடு அசுரனுடன் ஆவேசமாகப் போர் புரியத் தொடங்கினாள். அவளை அழிக்க பாய்ந்து வந்த வேளையில் அசுரனை வதம் செய்தாள். சிரத்தைக் கொய்து மண்ணில் வீசி அவனை யமலோகத்திற்கு அனுப்பி வைத்தாள். விழித்தெழுந்த பகவான், தரையில் கிடந்த முரனின் உடலைப் பார்த்தார். அந்தப் பெண் இறைவனை வணங்கினாள். பகவானே!! இந்தக் கொடிய அரக்கன், தாங்கள் சயனித்திருந்த வேளையில் தங்களைக் கொல்ல முற்பட்டான். உங்களது சரீரத்திலிருந்து தோன்றி இவனை வதைத்தேன் என்று கூறி கரம் கூப்பி நின்றாள்.
ஏகாதசி கேட்ட வரம்
அதைக் கேட்ட ஸ்ரீமந் நாராயணன் உன் செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீ வேண்டும் வரம் கேள்!! என்றார். அப்போது அந்தப் பெண் “நாராயணா!! தேவரோ, அசுரரோ, மனிதரோ, மிருகமோ, பிராணியோ, பட்சியோ எவரொருவர் நான் தோன்றிய நாளில் விரதம் அனுஷ்டிக்கிறாரோ, அவர் பாவங்கள் அனைத்தும் நீங்கி இறுதியில் தங்கள் பதம் அடைய வேண்டும்’’ என்று பிரார்த்தித்தாள். பகவான் அவள் கேட்ட வரத்தைத் தந்தார். பெண்ணே, நீ 11ஆம் நாள் தோன்றியதால் உலகத்தோரால் இன்று முதல் ஏகாதசி என அழைக்கப் பெறுவாய்!! என்றருளினார். பகவானுக்கு விருப்பமான திதிகளான திரிதியை, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி வரிசையில் நீ உயர்ந்த இடத்தை அடைவாய் என்றார். எனவே பகவானின் அவதார தினத்தைவிட பகவானின் தேகத்தில் இருந்து தோன்றிய ஏகாதசி முதன்மை பெற்றது.
வைகுண்ட ஏகாதசி தோன்றிய கதை
வைகுண்ட ஏகாதசி, பரமபத வாசல் திறப்புக்கு ஒரு கதை உண்டு. மது, கைடபன் என்ற இரண்டு அசுரர்கள். நான்முகனிடமிருந்து வேதத்தை அபகரித்துச் சென்றனர். நான்முகன் திகைத்து பகவான் நாராயணனிடம் முறையிட்டார். திருமால் குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக அவதரித்தார் அசுரர்களை வதைத்து, வேதங்களை மீட்டார். அப்போது மனம் திருந்திய இருவரும் தங்களுக்கு முக்தியளிக்குமாறு திருமாலிடம் வேண்டினர். மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி அன்று, மது – கைடபர்களுக்காக வைகுண்டத்தின் வடக்கு வாசலைத் திறந்து அவ்விருவரையும் வைகுண்டத்துக்குள்ளே அழைத்துச் சென்றார் வைகுண்ட வாசலைத் திறந்து மது கைடபருக்கு முக்தியளித்த ஏகாதசி என்பதால், வைகுண்ட ஏகாதசி என்று இந்நாள் அழைக்கப்படுகிறது. மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியில் பரமபத வாசல் என்ற அந்த வைகுந்த துவாரத்தின் வழியாக நாம் பகவானை சென்று சேவிக்கிறோம். பரமபதத்தில் உள்ள நுழைவு வாசல் வழியாக திருமாமணி மண்டபத்திலே ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவியோடு அமர்ந்திருக்க கூடிய பெருமாளிடம் சென்று, பேரின்பத்தைப் பெற்று, நித்ய கைங்கரியம் செய்யும் வாய்ப்பை பெறுகிறோம் என்று பொருள்.
The post ரங்கனின் ஆனந்த சயனம் இங்கே! appeared first on Dinakaran.