குரல் தந்த குரு!

பல வருஷங்களுக்கு முன்… ஒரு நாள் மாலை வேளை. காஞ்சி மகா ஸ்வாமிகளை தரிசிக்க ஏகக் கூட்டம். தனது அறையைவிட்டு வெளியே வந்த ஸ்வாமிகள், காத்திருக்கும் பக்தர் கூட்டத்தைச் சற்று நின்று உற்றுப் பார்த்துவிட்டுச் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். ஒவ்வொருவராக வந்து நமஸ்கரித்து, தங்கள் குறைகளை ஸ்வாமிகளிடம் தெரிவித்து, பரிகாரம் பெற்றுக் கொண்டு நகர்ந்தனர். பக்தர்கள் வரிசையில் சிறுவன் ஒருவனின் கையை இறுகப் பற்றியபடி நின்றிருந்தார், நடுத்தர வயது மனிதர் ஒருவர். அவர் கண்களிலிருந்து தாரையாக நீர் வழிந்தது. சிறுவன் பேந்தப்பேந்த விழித்தபடி எந்தவிதச் சலனமுமின்றி நின்றிருந்தான்.

பெரியவாளுக்கு முன் வந்து நின்ற அவர் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். சிறுவனும் நமஸ்கரித்தான். கண்களை இடுக்கிக் கொண்டு அவரைக் கூர்ந்து பார்த்த மகா ஸ்வாமிகள், “ஏண்டாப்பா. நீ மயிலாப்பூர் ஆடிட்டர் சங்கரநாராயணன் தானே? ஏன் இப்படி கண் கலங்கிண்டு நிக்கறே? என்ன சிரமம் ஒனக்கு?” என்று ஆதரவுடன் விசாரித்தார்.

பெரியவா கேட்டதும் துக்கம் மேலும் அதிகரித்துவிட்டது அவருக்கு. கேவிக்கேவி அழுதுகொண்டே, “ஆமா பெரியவா. இப்போ எனக்குத் தாங்கமுடியாத சிரமம் ஒண்ணு ஏற்பட்டுருக்கு. என்ன பண்றதுன்னே தெரியலே… நீங்கதான் என் தெய்வம். எப்படியாவது நிவர்த்தி பண்ணிக் கொடுக்கணும். வேற கதியில்லே!” என்று மீண்டும் பெரியவா பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்.நிலைமையை உணர்ந்த பெரியவா, வாத்ஸல்யத்தோடு, “சங்கரா… ஒண்ணும் தாபப்படாதே! சித்த நீ அப்டி ஒக்காந்துக்கோ… இவாள்ளாம் பேசிட்டுப் போனப்றம் ஒன்ன கூப்டறேன்!” என்று எதிரில் கை காண்பித்தார்.

“உத்தரவு பெரியவா… அப்டியே பண்றேன்!” என்று கூறிவிட்டுச் சற்றுத் தள்ளி எதிரில் அமர்ந்தார் ஆடிட்டர். சுமார் அரைமணி நேரம் கழித்து பக்தர்கள் ஆச்சார்யாளை தரிசித்து விட்டுக் கிளம்பினார்கள். ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்கிற இரு இளைஞர்கள் தவிர, அங்கு வேறு எவரும் இல்லை. ஆடிட்டர் சங்கர நாராயணனை ஜாடை காட்டி அழைத்தார் ஸ்வாமிகள். வந்து நமஸ்கரித்தார் ஆடிட்டர். ஆச்சார்யாள் வாஞ்சையோஎடு ஆடிட்டரைப் பார்த்து, “சங்கரா… பிராக்டீஸெல்லாம் நடந்துண்டிருக்கோல்லியோ? நீதான் ‘லீடிங்’ ஆடிட்டராச்சே… பிராக்டீஸுக்குக் கேப்பானேன்? அது சரி. ஒன் தகப்பனார் பஞ்சாபகேச ஐயர் தஞ்சாவூர்லதானே இருக்கார்? சௌக்யமா இருக்காரோல்லியோ?” என்று கேட்டார்.

உடனே ஆடிட்டர் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, “பிராக்டீஸெல்லாம் ரொம்ப நன்னா நடக்கிறது பெரியவா. அப்பாவும் அம்மாவும் பம்பாய்ல இருக்கிற என் தம்பிகிட்ட போயிருக்கா. ரெண்டு மாசமாறது. எனக்குத்தான் ஒரு துக்கம் ஏற்பட்டுடுத்து பெரியவா. அதத் தாங்க முடியலே… நீங்கதான் நிவர்த்தி பண்ணிக் குடுக்கணும்” என்று கூறியபடி அருகில் இருந்த சிறுவனைக் கட்டியணைத்துக் கதறி அழ ஆரம்பித்தார்.

சிறுவன் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு துக்கம் ஆடிட்டர் சங்கரநாராயணனின் மனதை மிகவும் பாதித்திருக்கிறது என்று நொடிப் பொழுதில் புரிந்துகொண்டது அந்த நடமாடும் தெய்வம்.
“அழப்டாது சங்கரா… எதுவா இருந்தாலும் புருஷா கண் கலங்கப்டாது! அது சரி… இந்த புள்ளயாண்டான் யாரு? ஒம் புத்ரனா?” எனக் கேட்டார் ஸ்வாமிகள்.“ஆமாம் பெரியவா. இவன் என் பையன்தான். பேரு சந்திரமௌலி. இவனுக்குத்தான் பெரியவா திடீர்னு…” என்று மேலே பேச முடியாமல் துக்கம் தொண்டை அடைக்க நின்றார் சங்கரநாராயணன்.

உடனே ஆச்சார்யாள் கவலை தோய்ந்த முகத்தோடு, “சங்கரா! இவனுக்கு திடீர்னு என்னாச்சு? சந்திரமௌலி ஸ்கூல்ல படிச்சுண்டுருக்கானோல்லியோ… பதட்டப்படாம விவரமா சொல்லேன்!” என ஆறுதலாகச் சொன்னார். சங்கர நாராயணன் கண்களைத் துடைத்தபடி, “பெரியவா… பையன் சந்திரமௌலி மைலாப்பூர் பி.எஸ். ஹைஸ்கூல்ல ஏழாவது படிச்சுண்டிருக்கான். பன்னண்டு வயசாறது. படிப்புல கெட்டிக்காரன். கிளாஸ்ல இவன்தான் ஃபர்ஸ்ட். இருவது நாளக்கி முன்னால ஒரு நாள் கார்த்தாலலேருந்து பேச்சு நின்னுடுத்து பெரியவா. கேட்டா, ‘பேச முடியலே’னு ஜாடை காட்றான். அன்னிலேர்ந்து ஸ்கூலுக்குப் போகலே. சாப்பாடு, டிபனெல்லாம் வழக்கம் போல சாப்டறான்… நன்னா தூங்கறான்.

அதெல்லாம் சரியா இருக்கு பெரியவா… ஆனா பேச்சுதான் வரல்லே… நா என்ன பண்ணுவேன்… நீங்கதான் கிருபை பண்ணி, இவனைப் பேச வைக்கணும்!” என்று கண்ணில் நீர் வழியப் பிரார்த்தித்தார்.ஸ்வாமிகள் சற்று நேரம் மௌனம் காத்தார். பிறகு ஆடிட்டரிடம், “பையனை அழச்சிண்டு கோயில் குளத்துக்கு எல்லாம் போறது உண்டா? சந்திரமௌலிக்கு ஸ்வாமிகிட்டே பக்தி உண்டோல்லியோ?”

“நியை உண்டு பெரியவா. கந்த சஷ்டி கவசம், ஆஞ்சநேயர், ராமர் ஸ்லோகங்களை எல்லாம் நித்யம் கார்த்தால குளிச்சுப்டு, ஸ்வாமி படத்துக்கு முன்னாடி நின்னு சொல்லிட்டுத்தான் ஸ்கூலுக்குக் கௌம்புவான். ஆத்ல(வீட்டில்) பெரிய கோதண்ட ராமர் படம் ஒண்ணு உண்டு பெரியவா. எங்க தாத்தா காலத்து தஞ்சாவூர் படம் அது. நித்யம் காலம்பற – சாயங்காலம் அத நமஸ்காரம் பண்ணிப்டு சீதா ராமன் திருவடிகளை நிறைய வாட்டி தொட்டுக் கண்ணுல ஒத்திண்டே இருப்பான். ‘சீதையையும், ராமனையும் எனக்கு ரொம்பவும் புடிக்கும்’னு அடிக்கடி சொல்லிண்டிருப்பான்.

வாரத்ல ரெண்டு மூணு நாள் அவன் அம்மாவோட கபாலீஸ்வரர், முண்டகக் கண்ணி அம்மன், லஸ் ஆஞ்சநேயர் கோயிலுக்கெல்லாம் போய் தரிசனம் பண்ணுவான். அப்படிப்பட்ட நல்ல கொழந்தைக்கு இப்டி ஆயிடுத்தே பெரியவா…” – சங்கரநாராயணனால் துக்கத்தை அடக்க முடியவில்லை. மீண்டும் கேவிக்கேவி அழ ஆரம்பித்தார்.அவரை சமாதானப்படுத்திய ஆச்சார்யாள், சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டுக் கேட்டார். “மயிலாப்பூரில் நடக்கிற உபன்யாசத்துக்கெல்லாம் இவனை அழச்சிண்டு போற வழக்கமுண்டோ?”

“உண்டு பெரியவா! சில நேரம் நா அழச்சிண்டு போவேன். இவனுக்கு பேச்சு நின்னு போனன்னிக்கு மொத நாள் சாயங்காலம் கூட நான்தான் இவனை ரசிகரஞ்சனி சபாவுல நடந்த ராமாயண உபன்யாசத்துக்கு அழச்சிண்டு போயிருந்தேன். சிரத்தையா கேட்டான். மறுநாள் இப்டி ஆயிடுத்து!”சிரித்துக் கொண்டே, “ராமாயணம் கேட்டதினாலேதான் இப்டி ஆயிடுத்துனு சொல்ல வர்றியா?” என்று கேட்டார் ஆச்சார்யாள்.

“ராம ராம! அப்டி இல்லே பெரியவா! அதுக்கு அடுத்த நாள்லேர்ந்துங்கறதுக்காகச் சொல்ல வந்தேன்!” என கன்னத்தில் போட்டுக் கொண்டார் ஆடிட்டர்.“அது சரி. உபன்யாசம் பண்ணினது யாரோ?” என வினவினார் பெரியவா.“ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா, பெரியவா!”“பேஷ் பேஷ். சோமதேவ சர்மாவோட புத்ரன். நல்ல பரம்பரை. ரொம்ப வாசிச்சவா… அது போகட்டும் சங்கரா. பையனை யாராவது டாக்டர்கிட்ட காமிச்சியோ?” “காமிச்சேன் பெரியவா!”“எந்த டாக்டர்?”“டாக்டர் சஞ்சீவி!” “அவர் என்ன சொல்றார்?” – பெரியவா

“டெஸ்ட்டெல்லாம் பண்ணிப்டு, ‘குரல்வளைல ரெண்டு நரம்பு பாதிக்கப்பட்ருக்கு. ஒரு ஆபரேஷன் பண்ணினா சரியாயிடலாம்’னு சொன்னார் பெரியவா.”“நிச்சயமா சரியாயிடும்னு சொல்லலியா?”“அப்டி உறுதியா சொல்லலே பெரியவா… எப்டியாவது நீங்கதான் இவனுக்குத் திருப்பியும் பேச்சு வரும்படி பண்ணணும். நீங்கதான் காப்பாத்தணும்!”சற்று நேர மௌனத்துக்குப் பிறகு பேசினார் ஆச்சார்யாள்: “நீ ஒரு கார்யம் பண்ணு சங்கரா. பையன் சந்திரமௌலிய அழச்சிண்டு இந்த ஊர்ல இருக்கிற கோயில்களுக்கு எல்லாம் போய் தரிசனம் பண்ணி பிரார்த்தனை பண்ணிண்டு வா. ராத்ரி மடத்திலேயே பலகாரம் பண்ணிப்டு தங்கிடு. கார்த்தால ஸ்நானம் பண்ணி, அனுஷ்டானம் இருந்தா அதயெல்லாம் முடிச்சிண்டு பத்து மணிக்கு வந்து என்னைப் பாரு!”

ஆச்சார்யாள் சொன்ன வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருந்தன சங்கரநாராயணனுக்கு! பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு இருவரும் ஆலய தரிசனத்துக்குப் புறப்பட்டனர். அடுத்தநாள் காலை பத்து மணி. முன்னதாகவே வந்து அமர்ந்திருந்தது அந்த நடமாடும் தெய்வம். அதிகக் கூட்டமில்லை. ஐந்தாறு பேர் காத்திருந்தனர். அனைவரும் தரிசித்துச் சென்றனர். ஆச்சார்யாளை நமஸ்கரித்து, கை கட்டி நின்றார் சங்கரநாராயணன். சந்திரமௌலியும் நமஸ்கரித்து எழுந்தான்.

ஸ்வாமிகள் அவனையே உற்றுப் பார்த்துவிட்டுப் பேசினார்: “சங்கரா… ஒரு கார்யம் பண்ணு. சந்திரமௌலியையும் அழச்சிண்டு போய், மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில்ல ஸ்வாமி அம்பாளுக்கு ஒரு பூர்ணாபிஷேகம் பண்ணி, அத தரிசனம் பண்ணி வை. அப்பறமா நீ என்ன பண்றே… அதே ஸ்ரீவத்ஸ ஜயராம சர்மா வேற எங்கயாவது பூர்த்தியா ஸ்ரீமத் ராமாயணம் சொல்றாரானு பாரு… அப்டி எங்கயாவது கோயில்லயோ, சபாவிலயோ சொல்றார்னா… நீ ஒரு கார்யம் பண்ணு.

சுந்தர காண்டத்லேர்ந்து ஸ்ரீசீதாராம பட்டாபிஷேக வைபவம் வரைக்கும் சந்த்ரமௌலிய கூட அழச்சிண்டு போய் ‘ஸ்ரவண’ம (கேட்டல்) பண்ணவை! ஸ்ரீசீதாராம பட்டாபிஷேக பூர்த்தி அன்னிக்கு, நீ என்ன பண்றே… நல்ல மலை வாழைப்பழமா பாத்து வாங்கிண்டு போய் ‘பௌராணி’கர்(உபன்யாசகர்) கைல கொடுத்து, ரெண்டு பேருமா அமர சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணுங்கோ. நீ மனசுக்குள்ள அந்த பட்டாபிஷேக ஸ்ரீசீதாராமனையும், பௌராணிகரையும் பிரார்த்தனை பண்ணிக்கோ… அந்த பட்டாபிராமன் காப்பாத்துவான். கவலையே படாதே… ேபாயிட்டு வா!” என்று இருவருக்கும் பிரசாதம் கொடுக்கச் சொல்லி, உத்தரவு கொடுத்து அனுப்பி வைத்து அந்த பரப்பிரம்மம்.

‘சென்னையில் எங்கேயாவது ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயண பிரவசனம் நடைபெறுகிறதா’ என்று தினமும் நாளிதழ்களின் ‘இன்றைய நிகழ்ச்சிகள்’ பகுதியைப் பார்த்து வந்தார் ஆடிட்டர்.அன்றைய பேப்பரில், ‘மயிலை ஸ்ரீஷீர்டி சாய்பாபா கோயிலில் ஸ்ரீஜயராம சர்மாவின் ஸ்ரீமத் ராமாயண உபன்யாசம் ‘நவாஹ’மாக (9 நாட்கள்) நடைபெறும்’ என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருந்தது.

அன்று சுந்தர காண்டம் பகுதி ஆரம்பம். சந்திரமௌலியுடன் ஸ்ரீசாய்பாபா கோயிலுக்குப் போனார், சங்கரநாராயணன். மிக உருக்கமான உபன்யாசம். மெய்ம்மறந்து கேட்டான் சந்திரமௌலி. சில நேரம் அவன் கண்ணிலிருந்து நீர் பெருகிறது. அப்போதெல்லாம் அவன் முதுகில் தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார், சங்கர நாராயணன்.அன்று ஸ்ரீமத் ராமாயண உபன்யாச பூர்த்தி தினம். மயிலை சாய்பாபா கோயிலில் நல்ல கூட்டம். இரவு 10.30 மணிக்கு ஸ்ரீசீதாராம பட்டாபிஷேகம் பூர்த்தியாகி, ராமாயணம் கேட்டால் உண்டாகும் பலன்களைச் சொல்லி முடித்தார் ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மா. ஒவ்வொருவராக அவரை நமஸ்கரித்து நகர்ந்தனர். சங்கரநாராணனும் சந்திர மௌலியும் அவரை நமஸ்கரித்தனர்.

தான் வாங்கிச் சென்றிருந்த ஒரு டஜன் பெரிய மலை வாழைப்பழச் சீப்பை சந்திரமௌலியிடம் கொடுத்து, ஸ்ரீவத்ஸ ஜெயராம சர்மாவிடம் சமர்ப்பித்து நமஸ்கரிக்குமாறு சொன்னார். அவன் அப்படியே செய்தான். சந்தோஷத்துடன் பழச் சீப்பை வாங்கிய அவர், தனக்குப் பின்புறமிருந்த ஸ்ரீராம பட்டாபிஷேக திருவுருவப் படத்துக்கும், ஷீர்டி ஸ்ரீ சாய்பாபா படத்துக்கும் அதைக் காட்டி அர்ப்பணித்தார். பிறகு அதிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்து, சந்திரமௌலியிடம் கொடுத்து, “கொழந்தே… நீ க்ஷேமமா இருப்பே. இந்த ரெண்டு பழத்தையும் நீயே சாப்டு!” என்று கூறி ஆசீர்வதித்தார். கோயிலைவிட்டு வெளியே வந்ததும், அந்த இரு பழங்களையும் சாப்பிட்டான் சந்திரமௌலி.

அடுத்த நாள் காலையில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. குளியலறையில் பல் துலக்கிவிட்டு, ஹாலுக்கு வந்த சந்திரமௌலி, “அம்மா, காபி ரெடியா?” என்று உரக்கக் குரல் கொடுத்தான். பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவன் அப்பாவும், சமையலறையில் இருந்த அம்மாவும் தூக்கிவாரிப் போட்டபடி ஹாலுக்கு ஓடோடி வந்தனர். அங்கு சிரித்தபடி நின்றிருந்தான் சந்திரமௌலி.“காபி ரெடியானு நீயாடா குரல் குடுத்தே சந்திரமௌலி!” என்று ஆனந்தம் பொங்க அவனைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் அம்மா. சங்கர நாராயணன். அவனைத் தோளில் தூக்கி வைத்துக் கூத்தாடினார். சந்திரமௌலி சரளமாகப் பழையபடி பேச ஆரம்பித்தான். தெரிந்தவர்கள் அத்தனை பேரும் வந்து பார்த்து, சந்தோஷப்பட்டனர்.

அன்று மாலை 5.30 மணி. காஞ்சி ஸ்ரீசங்கர மடத்தில் மகா ஸ்வாமிகள் ஏகாந்தமாக உட்கார்ந்திருந்தார். கூட்டம் அவ்வளவாக இல்லை. பத்து அல்லது பதினைந்து பேருடன் வேன் ஒன்றில் வந்தார், ஆடிட்டர் சங்கரநாராயணன்.சந்திரமௌலியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தார் ஆடிட்டர். சிரித்தபடியே ஆச்சார்யாள் கேட்ட முதல் கேள்வி: “சந்திரமௌலீ… இப்போ நன்னா பேச வந்துடுத்தோல்லியோ? பேஷ்… பேஷ்! எல்லாம் அந்த சீதாராமனோட கிருபை!”உடனே சந்திரமௌலி, “ஹரஹர சங்கர… ஜெய ஜெய சங்கர… காமகோடி சங்கர…” என்று உரக்க கோஷமிட்டான். அனைவரும் மெய்ம்மறந்து நின்றிருந்தனர்.

சற்று நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேசியது: “சங்கரா… இப்போ சொல்றேன், கேளு. சந்திரமௌலிக்கு இப்படி திடீர்னு ஏற்பட்டதுக்கு வேற ஒண்ணும் காரணமில்லே. அவனுக்கு இயற்கையாவே சீதாதேவிகிட்டேயும், ஸ்ரீராமனிடமும் அளவு கடந்த பிரியமும் பக்தியும் இருந்திருக்கு. அவாளுக்கு ஒரு சிரமம்னா அத இவனால தாங்கிக்க முடியாது! மொதல்ல உபன்யாசத்த இவன் கேக்கற அன்னிக்கு ஜயராம சர்மா, சீதாபிராட்டியை ராவணன் அபகரிச்சுண்டு போற ‘கட்ட’த்த சொல்லியிருக்கணும். நா சொல்றது சர்தானா (சரிதானா) சங்கரா…?” பிரமித்து நின்ற ஆடிட்டர் வாய் திறந்து, “அதேதான் பெரியவா… அதேதான்! அன்னிக்கு அந்த கட்டத்தைத்தான் ரொம்ப உருக்கமா சொன்னார்!” என ஆமோதித்தார்.

ஸ்வாமிகள் தொடர்ந்தார்: “நாம அளவு கடந்த பக்தியும், ஆசையும் வெச்சுண்டிருக்கிற மாதா சீதைய ஒரு ராட்சசன் தூக்கிண்டு போறான்கறத கேட்ட ஒடனே இவனுக்கு உள்ளூர பிரமை புடிச்சு ஸ்தம்பிச்ச நெலமை ஏற்பட்டுடுத்து. பேச்சும் ஸ்தம்பிச்சுடுத்து. வேற ஒண்ணுமில்லே.

இதுக்கு ஒரே நிவர்த்தி மார்க்கம் என்ன? அதே பௌராணிகர் வாக்காலயே ‘அம்மா சீதைக்கு ஒரு சிரமமும் இல்லாம திரும்பவும் மீட்டுண்டு வந்தாச்சு’ங்கறத இவன் காதால கேட்டுட்டா மனசையும், வாக்கையும் அமுத்திண்டிருக்கிற அந்தப் பிரமை விட்டுப் போயிடும்னு தோணித்து. அதனாலதான் அப்டி பண்ணச் சொன்னேன். சீதாராமன் கிருபையால எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. சந்திரமௌலி… நீ பரம க்ஷேமமா இருப்பே!”அந்த நடமாடும் தெய்வத்தின் பேச்சைக் கேட்ட அனைவரும் மலைத்து நின்றனர்!

ரமணி அண்ணா

Related Stories: