மாற்றத்தோடு ஏற்றத்தையும் தரும் மாசி மகம்!

2.3.2026

மாசி மாதத்தின் மிக முக்கிய பண்டிகை, உற்சவம், திருவிழா “மாசி மகம்” தான். சைவ, வைணவ, அம்பாள், முருகன் என எல்லா தெய்வங்களுக்கும் மாசிமகம் திருவிழாதான். மாசி மகத்தின் சிறப்புக்களை இந்த தொகுப்பில் காண்போம்.

நல் வாழ்வைத் தரும் மாசி மகம்

மாசிமக காலத்தில் புனித நீராடுவதும், புண்ணிய யாத்திரை செய்வதும், புனித கோயில்களைத் தரிசிப்பதும், பாவங்களைப் போக்கும். புண்ணியங்களை அதிகரிக்கும். தோஷங்களை நீக்கி, நீடித்த நல்வாழ்வைத் தரும். சைவ ஆலயங்களாக இருந்தாலும், வைணவ ஆலயங்களாக இருந்தாலும், எந்த பெரிய விழாவிலும் நிறைவாக தீர்த்தவாரி நடைபெறும். வைணவ விழாவில் இதனை “அவபிரதம்” என்று சொல்லுவார்கள். திருமலையில்கூட பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளில் சக்கர தீர்த்தம் நடைபெறும். சைவத்தில் இதனை தீர்த்தவாரி என்பர். பிரம்மோற்சவம் எனப்படும் பெருவிழாவின் நிறைவு நாளில் மட்டுமல்லாது, வேறு சில நாட்களிலும் தீர்த்தவாரி நடைபெறும். கிரகண காலங்களிலும், மாசிமகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி முதலிய நாட்களிலும் தீர்த்தவாரி விழா நடைபெறும். மாசி மாதத்திற்கு மாகம் என்று பெயர். மாசி பௌர்ணமி தினத்தன்று மக நட்சத்திரம் இணைவதால், மாகம் என்பது மகமாக மாறியது என்பார்கள். “அகம்” என்றால் பாவங்கள் அல்லது மாசுகள். “மா” என்றால் இல்லை என்று பொருள். “பாவங்களை இல்லை” என்று ஆக்கும் நாள் மாசி மகம்.

மாசி மகமும், மகாமகமும்

பொதுவாகவே சூரியன் கும்ப ராசியில் இருக்கக்கூடிய மாசிமாதம் முழுக்கவே புனித நீராடலுக்கு மிக உயர்ந்த மாதம் என்று சொல்லப் பட்டாலும், மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினம் மக நட்சத்திரத்தில் வருவதால், பௌர்ணமி நீராடல் என்பது மிக மிகத் தூய்மையானதாகவும், புண்ணியம் ஆனதாகவும் கருதப்படுகிறது.

மாசிமகம் கும்பகோணத்தில் ஏன் விசேஷம்?

கும்பகோணத்திற்கு மட்டும் அப்படி என்ன ஒரு விசேஷம் என்று கேட்கலாம். ராசிகளில் மாசி மாதத்திற்கு உரிய ராசி கும்ப ராசி. அதிலே கும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குரு சிம்ம ராசிக்கு வந்து சந்திரனுடன் சேரும் காலம்தான் மகாமகம். சிம்ம ராசி என்பது கால புருஷனுக்கு 5 ஆவது ராசி (புண்ணிய ராசி). ஐந்தாவது ராசியை திரிகோண ராசி அல்லது கோண ராசி என்று சொல்லுவார்கள். கும்பமும் (கும்பராசியும்) கோணமும் (திரிகோண ராசியான சிம்மம்) சந்திக்கக்கூடிய புனிதமான நாள் என்பதால் கும்பம் + கோணம் இணைந்து கும்பகோணம் ஆகியது. கும்பகோணம் மிகச் சிறந்த புனிதத் தலமாக ஆதிகாலத்திலிருந்து கருதப்படுகிறது. அங்கே மகாமக குளம் இதற்கென்றே உருவாக்கப்பட்டது. மகாமக தீர்த்தம் “அமிர்த தீர்த்தம்” என்று சொல்லப்படுகின்றது. மகாமக தீர்த்தத்தில் நீராடி வணங்கினால் மறுபிறப்பற்ற அமரத்துவம் அடையலாம் என்று புராண நூல்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன.

சோடஷ லிங்கங்கள்

16 சிவாலயங்கள் மகாமகக் குளக்கரை சுற்றிலும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சோடசலிங்க ஆலயங்கள் என்று அழைக்கின்றார்கள். இதில் ஒவ்வொரு மண்டபத்திலும் பிரம்மதீர்த்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், பாளேஸ்வரர், கோணேஷ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமாபாகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ்தரபாலேஸ்வரர் என மொத்தம் 16 சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து சோடஷ லிங்கங்கள் என அழைக்கப்படும். பிற நகரங்களில் செய்த பாவங்கள் காசியில் தீரும். காசியில் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் தீரும். கும்பகோணத்தில் செய்த பாவங்கள் கும்பகோணத்திலே தீரும். காரணம், கும்பகோணம் மாசிமக சிறப்பால் அத்தனை புனிதம் அடைந்த தலம் ஆகும். இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளும் கும்பகோணத்தில் வந்து மாசிமக நாளில் புனித மடைகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.

எப்படி நீராடுவது?

நீராடும் நீரை கங்கையாகக் கருதி குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய நதிகளை ‘சப்த தீர்த்தம்’ என்று சொல்வர். கிழக்கு அல்லது வடக்கு முகமாக நின்று, `கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்’ என்னும் ஸ்லோகத்தை சொல்லிவிட்டு குளித்தால் சாதாரண குளியல்கூட புனித தீர்த்தங்களில் நீராடிய புண்ணியத்தை தரும்.

பல கோடி தீர்த்தங்கள் சேரும் இடம்

புண்ணிய நதிகளாக கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்கள் தீர சிவபெருமானிடம் வேண்டினார்கள். அதற்கு சிவபெருமான், “கும்பகோணத்தில் அக்னித்திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்’’ என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி, தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன. நிஜத்தில் மாசி மகம் அன்று அறுபத்தி ஆறு கோடி தீர்த்தங்களும் மகா மக குளத்தில் வந்து கலப்பதாக ஐதீகம். இந்த மகாமக குளத்தினை நவ கன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்த தீர்த்தம் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன. அதே தீர்த்தத் தில் நாமும் நீராட நம் பாவங்கள் போகும் அல்லவா?

தானம் தர வேண்டும்

மகாமகக் குளத்தில் நீராடி, கரையில் உள்ள மண்டபங்களில் தானம் தரவேண்டும் என்று ஆதி நூல்கள் வரையறுத்துச் சொல்லியிருக்கின்றன. மாசி மகத்தில், புனித நீராடி, தானம் தருவது என்பது முக்கியமானது. பொதுவாகவே எந்த புனித நதியில் நீராடினாலும் தானம் தர வேண்டும். புனித நீராடலில் இது ஒரு அங்கமாகும். காலப்போக்கில் வழக் கொழிந்துவிட்டது என்றாலும்கூட, இன்றைக்கும் புனித நீராடிவிட்டு வருகின்ற பொழுது, ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு பொருளைத் தருவது என்பது இன்னும் சிலரிடமும் இருக்கிறது. இப்பொழுது உள்ள சூழ்நிலையில் புனித நதிகளில் நீராடுவது இயலாத காரியம் என்று சிலர் நினைக்கலாம். “உள்ளமே பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’’ என்று திருமூலர் சொன்னபடி, தினசரி நம்முடைய நீராட்டத்தை புனித நீராட்டமாக மாற்றிக் கொள்ளலாம். நீரை சப்த நதிகளாக பாவித்து வணங்கி, அந்த நதிகளின் சங்கமமாக கற்பனை செய்துகொண்டு நீராடி வழிபட வேண்டும்.

தீர்த்தவாரியில் 12 சிவன் கோயில்கள்

மாசி மகம் அன்று ஒரே நேரத்தில் 12 சிவாலயங்கலிருந்து ஸ்வாமிகள் புறப்பாடாகி, ஒரே இடத்தில் தீர்த்தவாரி கொடுப்பது இக்குளத்தில் மட்டுமே யாகும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. ஒரு தனி வரலாறு உண்டு.
1. நவகன்னியர் அருள் பாலிக்கும் இடம் – காசி விஸ்வநாதர் கோயில்.
2. அமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம் – கும்பேஸ்வரர் கோயில்.
3. வில்வம் விழுந்த இடம் – நாகேஸ்வரர் கோயில்.
4. உறி (சிக்கேசம்) விழுந்த இடம் – சோமேஸ்வரர் கோயில்.
5. பூணூல் (யக்ஞோபவிதம்) விழுந்த இடம் – கௌதமேஸ்வரர் கோயில்.
6. தேங்காய் (நாரிக்கேளம்) விழுந்த இடம் – அபிமுகேஸ்வரர் கோயில்.
7. சிவன் வேடுவ உருவத்துடன் அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த இடம் – பாணபுரீஸ்வரர் கோயில்.
8. புஷ்பங்கள் விழுந்த இடம் – கம்பட்ட விஸ்வநாதர் கோயில்.
9. மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம் – ஏகாம்பரேஸ்வரர் கோயில்.
10. அமிர்தத் துளிகள் விழுந்த இடம் – கோடீஸ்வரர் கோயில் (இக்கோயிலின் கிணறு).
11. சந்தனம் விழுந்த இடம் – காளஹஸ்தீஸ்வரர் கோயில்.
12. அமிர்த கலசத்தின் நடுப்பாகம் விழுந்த இடம் – அமிர்தகலசநாதர் கோயில்.

பூமியை வராகப் பெருமான் நிலை நிறுத்திய நாள்

மாசி மாதத்திற்கு பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. இதைப் பற்றி வெவ்வேறு புராணங்கள் கூறுகின்றன. வராக பெருமாள் பூமிப் பிராட்டியை மீட்பதற்காக கடலுக்குள் நுழைந்து, ஆற்றலுடன் போரிட்டு, இரண்யாட்சனைக் கொன்று, தன்னுடைய தந்தத்தால் பூமிப் பிராட்டியை தாங்கி பூமியை உத்தா ரணம் செய்தார். இதை நம்மாழ்வார் “கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய்” என்று ஒரு அழகான பாசுரத்தில் பாடுகின்றார். ஆண்டாளும், “பாசி தூர்த்தக் கிடந்த பார்மகட்குப் பண்டு ஒரு நாள், மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றிஆம், தேசு உடைய தேவர் திருவரங்கச் செல்வனார்” என்று பாடுகின்றார் இப்படி வராகப்பெருமாள் பூமியை உத்தாரணம் செய்த நாள், மாசிமக நாள் என்று கூறுகின்றார்கள்

வருணனின் தோஷம் நீங்கியது

நீரின்றி அமையாது உலகு. வருண பகவான் நீர் தேவதை. நாம் எந்த பூஜை, ஹோமம் போன்ற காரியங்கள் செய்தாலும், முதலில் வருண பகவானைத்தான் ஆவாகனம் செய்வோம். வருண பகவானுக்கு உரிய திசை மேற்கு திசை. ஆண்டாள் வருண பகவானை “ஆழிமழைக் கண்ணா” என்று அழைத்து, “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்ய வேண்டும்” என்று கட்டளை இடுவதாக திருப்பாவையில் வருகின்றது. இந்த வருண பகவானுக்கு ஒருநாள் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதனை நீக்கிக் கொள்வதற்காக இறைவனிடம் சரண் அடைந்தார். இறைவன் அவருடைய பிரம்மஹத்தி தோஷத்தை, மாசி மக நீராட்டத்தின் போது நீக்குவதாக உறுதி அளித்தார். அப்படி வருணனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய நாள் மாசிமக நாள். அன்று நீராடி இறைவனை தரிசனம் செய்ய நம் தோஷங்களும் நீங்கும்.

மாசிமகத்தில் பற்பல உற்சவங்கள்

மாசி மகம் ஒட்டி பல்வேறு பிரசித்தி பெற்ற ஆலயங்களில் விழா மற்றும் பிரமோற்சவங்கள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, கோவை அருகே காரமடை அரங்கநாதர் கோயில் தேர் உற்சவம், குடந்தை சக்கரபாணி கோயில் தேர் உற்சவம், மதுரை கூடலழகர், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப்பெருமாள் மற்றும் அழகர்கோவில் கள்ளழகர் முதலிய கோயில்களில் தெப்ப உற்சவம், மதுரையில் திருமோகூர் காளமேகப் பெருமாள் யானை மலைக்கு எழுந்தருளி கஜேந்திர மோட்சம் போன்ற சிறப்புகள் தமிழகமெங்கும் உள்ள கோயிலில் நடைபெறுகின்றன.கோயம்புத்தூருக்கு அருகில் உள்ளது காரமடை. இங்குள்ள காரமடை ரங்கநாதர் ஆலயம் புகழ் பெற்றது. பெருமாள் ரங்கநாதர் என்ற பெயரில் இருந்தாலும், பள்ளிகொண்ட கோலத்தில் இல்லாமல் சிறிய கம்பத்தில் இருக்கின்றார். முகம் மட்டுமே இருக்கிறது. இவர் சுயம்புவாக ஆனவர். இங்கே மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது.

பாவம் போக்கும் மூன்று தீர்த்தங்கள்

புதனுக்கு உரிய தலம் திருவெண்காடு. திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்த திருத்தலம் என்பதால் ஆதிசிதம்பரம் என்றழைக்கப்படுகின்றது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஈஸ்வரனுக்கு சுவேத ஆரண்யேஸ்வரர் என்று பெயர். அம்மனுக்கு பிரம்ம வித்யாம்பிகை என்று பெயர். வித்தைக்கு அதிபதியான இந்த அம்பிகையை வணங்கி, கல்வி கேள்விகளில் மிகச்சிறந்த புகழை அடையலாம். இங்கு மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது, அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த் துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன. மாசி மகம் அன்று சூரிய, சந்திரனைப் பார்க்க, அக்னி ராசியான சிம்ம ராசியில் சந்திரன் இருக்கிறார் என்பதால் விசேஷமான தினம். அன்று திருவெண்காட்டில் உள்ள மூன்று தீர்த்தங்களிலும் உள்ள நீரை தலையில் தெளித்துக் கொண்டு அம்பிகையையும் ஈஸ்வரனையும் வழிபடுவதன் மூலமாக சிறந்த பலன்கள் கிடைக்கும்.

கொடிய தோஷங்கள் போக்கும் மாசிமகம்

முற் பிறவிகளில் செய்த கொடிய பாவங்களும், இப்பிறவியில் அறியாமல் செய்யும் பாவங்களும், துன்பங்களை தந்து கொண்டே இருக்கும். மகத்தில் நீராடினால் சென்ற பிறவியில் செய்த பிரம்மஹத்தி தோஷம் எனும் கொலை பாவம், கோயில் சொத்துக்களை திருடிய பாவம், பிறர் சொத்துக்களை கவர்ந்த பாவம் பெண்களை இழிவு படுத்தி சாபத்தை ஏற்படுத்திக் கொண்ட பாவம், நன்றாக வாழும் தம்பதிகளைப் பிரித்த பாவம், ஒன்றாக இருந்த குடும்பத்தை கோள் சொல்லி பிரித்த பாவம் முதலிய மகா பாவங்கள் தீர்ந்துவிடும் என்று சொல்லப்படுகின்றன. எனவே சஞ்சித (பழைய) வினைகள் தீர மாசிமக நீராட்டமும், வழிபாடும், தானங்களும் பழைய நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

நீர் நிலைகளின் தூய்மையை பிரதிபலிப்பது மாசி மகம்

ஒவ்வொரு திருத்தலத்தின் மகிமையை விளக்குவது போலவே, ஒவ்வொரு புண்ணிய நதியின் பெருமையையும் விளக்கி பல புராணங்களும் காவியங்களும் நம்முடைய நாட்டில் இயற்றப்பட்டுள்ளன. (உதாரணம்:காவேரி மகாத்மியம்) ஒரு தலத்தைப் பாடுகின்ற பொழுது அங்குள்ள தீர்த்தத்தின் பெருமையை பாடாமல் இருந்ததில்லை. நதிகள் என்பது அந் தந்த பகுதி மக்களின் வாழ்க்கையுடன் பிண்ணிப் பிணைந்தவை. காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
“கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு’’
– என்று பாரதி பாடியது போல் நதிகளின் ஓட்டத்துடன்தான் அந்தந்த பகுதி மக்களின் வாழ்க்கை முறை செழுமையுடன் அமைந்திருந்தது. ஆற்றை யொட்டி கோயில்கள் எழுந்தன. கலைகள் வளர்ந்தன. நாகரீகம் செழித்தன. எனவே மாசி மகம், ஆறாகிய நீர் நிலைகளின் தூய்மை, புனிதம், நன்மை என அனைத்தின் பிரதிபலிப்பான விழாவாக கருதப்படுகிறது.

ஜகத்தை ஆளும் மகம் எப்படி?

பொதுவாக இந்த உலகத்தை சக்திதான் ஆள்கிறது என்று சிவ புராணங்கள் சொல்லுகின்றன. அதாவது சிவனின் சக்திதான் உமாதேவியார். அதைப் போலவே வைணவ நூல்களும் மகாலட்சுமியின் திருவருள்தான் இந்த உலகத்தை ஆள்கின்றது என்று சொல்கின்றன. மகாலட்சுமியின் கண் அசைவில்தான் இறைவன் இவ்வுலகத்தை பரிபாலனம் செய்கின்றான் என்று வைணவ உரையாசிரியர்கள் கூறுகின்றார்கள். எனவே பெண்களின் சக்திதான் இந்த உலகத்தை ஆள்கின்றது. இதில் உமாதேவியார் தட்ச பிரஜாபதியின் மகளாக பிறந்து, சிவபெருமானை மணம் முடித்தார். இந்த உலகத்தை ஆளும் சக்தியைப் பெற்றார். அவர் அவதார நட்சத்திரம் மாசி மாதம் மக நட்சத்திரம். அதனால்தான் “மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்” என்கின்ற பழமொழி வந்திருக்கலாம் என்று சிந்திக்கத் தோன்றுகிறது. காரணம் லோகமாதாவே பிறந்த நட்சத்திரம் அல்லவா மாசி மகம்.

ஞானம் தரும் கேதுவும் மாசி மகமும்

ஜோதிட சாஸ்திரத்தில் மக நட்சத்திரத்திற்கு உரிய கிரகம் கேது பகவான். கேது பகவான் ஞானத்தை தரவல்லவர். ஞானமூர்த்தி என்று சொல்லுவார்கள். அவர் லக்கினத்துக்கு பன்னிரண்டாம் ராசியில் இருந்தால் மோட்ச பாக்கியத்தைத் தருவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. நடைமுறையில் அந்தப் பலன்கள் வெவ்வேறு காரணங்களால் மாறு பட்டு இருந்தாலும்கூட, முக்தி நிலை ஆகிய பன்னிரண்டாம் ராசியில், அதாவது மோட்ச ராசியில், மோட்ச காரகனாக கேதுபகவான் தர வாய்ப்பு என்ற அடிப்படையில் எடுத்துக் கொள்ளலாம். எனவே கேதுவுக் குரிய இந்த மக நட்சத்திர நாளில் விரதம் இருந்து குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வணங்குவதன் மூலமாக ஒருவன் பேரின்பத்தையும் பேராற்றலையும் பெற முடியும். மாசிமகம் தினத்தன்று உபவாசம் இருக்க வேண்டும். புனித நீர்நிலைகளில் நீராட வேண்டும். இறைவனை வணங்க வேண்டும். இறைவனுக்கு நடக்கின்ற அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ள வேண்டும். இறைவனுடைய அருள் பிரசாதத்தைத் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது. அன்றைய தினம் யாராவது ஒருவருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். எளிய நிலையில் உள்ளவர்களுக்கு பொருள் தானம் செய்ய வேண்டும் போன்ற விதிமுறைகள் மாசி மக விரதத்தை குறித்த நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

கர்மவினைகளை தீர்த்து விடுகின்றன

மாசி மகம் அன்று நீராடி பிதுர் கடன்கள் செய்வது வழக்கம். மக நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள் என்பதால் அன்று முன்னோர் வழிபாடு செய்து அவர்களுடைய ஆசியைப் பெறவேண்டும். புனித தீர்த்தங்களில் தர்ப்பணம், பிதுர்க்கடன் முதலியவை செய்வது பலமடங்கு புண்ணியங்களைத் தரும். பொதுவாக எந்த செயலைச் செய்தாலும் மூன்று முறை செய்யவேண்டும் அப்படிச் செய்தால் அந்த செயல் முழுமை அடைந்ததாகப் பொருள். நாம் குளத்திலோ ஆற்றிலோ புனித நீராடும் பொழுது மூன்றுதரம் மூழ்கி எழ வேண்டும் முதன் முழுக்கில் பாவம் தீரும். இரண்டாம் முழுக்கில் நல் வாழ்வு கிடைக்கும். மூன்றாம் முழுக்கில் நம்முடைய புண்ணியங்கள் பல மடங்காகப் பெருகும்!

Related Stories: