இந்த வார விசேஷங்கள்

28-2-2026 – சனி
திருச்செந்தூர் முருகன்
பச்சை சாத்துதல்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழா 8-ம் நாளில், சண்முகர் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை பட்டு உடுத்தி, மரகதக் கற்கள் மற்றும் பச்சைப் பூக்களால் அலங்கரிக் கப்பட்டு விஷ்ணு அம்சத்தில் வீதி உலா வருகிறார். வள்ளி, தெய்வானையுடன் சண்முகர் பச்சை சாத்தி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பச்சை நிறம் வளம், செழிப்பு, அமைதி, மற்றும் ஆரோக்கியத்தை குறிக்கிறது.இந்த அலங்கார தரிசனம் பக்தர்களுக்கு மன அமைதியையும், குடும்ப வளமும் தரும்.விவசாய வளம் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி பலர் இந்த நாளில் தரிசனம் செய்கிறார்கள்.

28-2-2026 – சனி
காரமடை அரங்கநாதர்
திருக்கல்யாணம்

பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமான கோவை காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசிமகத் தேர்த் திருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெறும். ஸ்ரீதேவி பூதேவிக்கு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு யாக வேள்விகள் நடத்தி, அரங்கநாத பெருமாளுக்கும் ஸ்ரீதேவி பூதேவிக்கும் திருக்கல்யாண வைபவத்தை நடத்துவர்.

1-3-2026 – ஞாயிறு
மதுரையில் இம்மையில்
நன்மை தருவார் தேர்

இம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை நகரின் மையப் பகுதியில், தெற்கு மாசி வீதி – மேலமாசி வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்த நிலையில் அமைந்த லிங்கத்திற்கு கீழ்புறத்தில் சிவனும் பார்வதியும் இலிங்கத்திற்கு பூஜை செய்யுமாறு மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றனர். இத்தலம் பூலோக கைலாயம் என வழங்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவர் சொக்கநாதர். அம்பாள் மத்தியபுரி நாயகி. உற்சவ மூர்த்தி சோமாஸ்கந்தர். தல விருட்சம் வில்வ மரம்.

2-3-2026 திங்கள்
மாசி மகம்

இன்று சந்திரனுக்குரிய திங்கட் கிழமை. பௌர்ணமி நாள். சதுர்த்தசி திதி. மக நட்சத்திரமும் பௌர்ணமி தினமும் சந்திரனும் இணைந்த இந்நாளில் பெரும்பாலான கோயில்களில் மாசி மகம் கொண்டாடப்படுகிறது. பல திவ்ய தேசங்களில் பிரம்மோற்சவம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநாள் முருகப் பெருமானுக்கு உகந்த நாள். மாசிமக நாளில் சுவாமிமலையில் சிவபெருமானுக்கு முருகன் பிரணவ உபதேசம் செய்தார் என்று புராணம் சொல்லுகின்றது. இன்று முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்யும் பெண்களுக்கு ஆண் சந்ததி விருத்தி உண்டு என்று புராணங்கள் கூறு கின்றன. மாசி மகம் குருபகவானுக்கும் உகந்த நாள். அவருக்கு மஞ்சள் ஆடை அணிவித்து மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

வல்லாள மகாராஜனுக்கு திருவண்ணாமலை ஈசனே மகனாக வந்ததாக ஒரு வரலாறு உண்டு. மாசி மாதம் மக நட்சத்திரத்தில் பள்ளிகொண்டாபட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி நீத்தார் கடனை ஈசன்நிறைவேற்றுவதாக வரலாறு.திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் உள்ள, பாடல் பெற்ற, தலம். இங்கு சுயம்புவாகத் தோன்றிய மூலவர் ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் காட்சி தருகிறார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம், நவரத்தின பச்சை என மாறிமாறி காட்சி அளிப்பதால் பஞ்சலிங்கேசர் என அழைப்பார்கள். இங்குதான் இறைவன், திருநாவுக்கரசருக்கு திருவடி சூட்டினார். ஆதலால் சடாரி வழக்கம் இங்கு உள்ளது. அமர்நீதி நாயனாரை சிவன் இத்தலத்தில் ஆட்கொண்டார். குந்திதேவி தன் தோஷம் நீங்க இத்தலத்தில் நீராடினாள். அந்த நாள் மாசி மகம்.

2-3-2026 – திங்கள்
திருவொற்றியூர் மகிழடி சேவை

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலின் மிக முக்கிய விழாவான
மகிழடி சேவை மாசி மாத பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளில் நடைபெறும் புகழ்பெற்ற நிகழ்வாகும். இத்தலத்தின் தல விருட்சமான மகிழ மரத்தின் கீழ், சிவபெருமான் தியாகராஜராகக் காட்சியளித்து, அடியாருக்காகத் தூது சென்ற நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்த சிறப்பு சேவை பக்தர்களால் வழிபடப்படுகிறது. இந்நிகழ்வில், தியாகராஜர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், மகிழ மரத் தடிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

3-3-2026 – செவ்வாய்
திருக்கோட்டியூர்
மாசி மக தெப்பம்

திருக்கோஷ்டியூர் இராமானுஜரின் ஆச்சார்யரான திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவதரித்த திருத்தலம். ஸ்ரீராமானுஜர், ஆசையுடையோர்க்கு எட்டெழுத்து மந்திர மகிமையையும் மந்திரத்தையும் எடுத்துரைத்த புண்ணிய பூமி. இங்குள்ள சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் மாசி மக பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது.பிரமோற்சவத்தின் முக்கியவிழா தெப்ப உற்சவ விழா இன்று நடக்கிறது. மாசிமக விழாவையொட்டி தினந்தோறும் இரவு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. 9-ம் நாளில் காலை வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள்வார். 10-ம் திருநாளான இன்று காலையில் தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், அதன் பின்னர் காலை பகல் தெப்பமும், இரவு 9 மணிக்கு இரவு தெப்பம் நிகழ்ச்சியும் நடைபெறும். நாளை காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்க தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்று விழா நிறைவு பெறும். கோயில்தெப்பக் குளத்தில் சுற்றி தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட இடத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வர்.

3-3-2026 – செவ்வாய்
சந்திர கிரகணம்

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் வரும் மார்ச் 3 ம்தேதி செவ்வாய்க்கிழமை ஏற்படுகிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை (7 1/2 மணி) ஏழரை வரை ஏழுமலையான் கோயில் நடை சாற்றப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த கிரகணம் மாலை வேளையில் தெரியும். இதன் உச்சகட்டம் மாலை 5:03 (IST) மணியளவில் இருக்கும்.

பகுதி கிரகணம் ஆரம்பம்: மாலை 3:20 மணி
முழு சந்திர கிரகணம் ஆரம்பம்: மாலை 4:34 மணி
கிரகணத்தின் அதிகபட்ச நிலை (Maximum Eclipse): மாலை 5:03 மணி
முழு சந்திர கிரகணம் முடிவு: மாலை 5:32 மணி
கிரகணம் தொடங்குவதற்கு முன் சுமார் 9 மணி நேரம் சூதக் காலம் (Sutak) எனக் கணக்கிடப்படுகிறது. இந்த நேரத்தில் கோயில் வழிபாடு, சமையல், உண்பது, திருமணம் / சுப நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவைகள் தவிர்க்கப் படுகின்றன.

4-3-2026 – புதன்
கோவை கோனியம்மன் தேர்

கோவை மாநகரத்தின் மையப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற, 600 ஆண்டுகால பழமையான ஆலயம் அருள்மிகு கோனியம்மா ஆலயம். கோனி என்றால் அரசி என்று பொருள். கோவை மாநகரத்தின் அரசியாக விளங்கி அருள் பாலிக்கும் இந்த அம்மனுக்கு மாசிப் பெருவிழா 14 நாட்கள் நடைபெறும். இன்று பிரசித்தி பெற்ற தேர் உற்சவம்.

4-3-2026 – புதன்
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம்

தென் தமிழகத்தில் எளிய மக்களுக்கு ஆன்மிக ஈடுபாட்டை ஏற்படுத்தி பல்வேறு போதனைகளை வழங்கி அவர்கள் நிறை வாழ்வு வாழவும், ஆன்மிக வலிமை பெறவும் வழிகாட்டியவர் வைகுண்டர். கன்னியாகுமரி மாவட்டம், தாமரைக்குளம் கிராமம், சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. வைகுண்டரின் புகழ் தென் திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிகவேகமாகப் பரவியது. அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பட்டார். அகிலத்திரட்டு அம்மானை அவரை நாராயண பண்டாரம் என விளம்புகிறது. கலியுகத்தை அழித்து, தர்ம யுகத்தை மலரச் செய்யவே இவர் அவதாரம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார்கள். இவர் அவதார தினம் மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

5-3-2026 – வியாழன்
எறிபத்த நாயனார் குரு பூஜை

63 நாயன்மார்களில் வன்தொண்டர்கள் உண்டு. மென் தொண்டர்கள் உண்டு. தாங்கள் வணங்கும் சிவபெருமானையும், தாங்கள் பின்பற்றும் சிவநெறிக்கும் இடையூறு வந்து விட்டால், அதைச் சகித்துக் கொள்ள முடியாத முரட்டுத்தனமான குணமுடைய சில தொண்டர்களும் நாயன்மார்கள் வரிசையில் உண்டு. இவர்கள் இறைவன் மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் உணர்ச்சி வசப்பட்டு, பிறரை தண்டித்து விடுவர். அதே சமயம், பிறர் செய்யும் தவறுகளுக்காக தன்னையே தண்டித்துக் கொண்ட தொண்டர்களும் உண்டு. சாதாரண மனிதர்கள், நினைத்துக் கூட பார்க்க முடியாத இந்தச் செயல்களை, நாம் நம்முடைய சாதாரண விதி மற்றும் தர்மங்களைக் கொண்டு அளந்துவிட முடியாது. அப்படிப்பட்ட தொண்டர்களில் ஒருவர்தான் எறிபத்த நாயனார். கையில் எப்பொழுதும் அவர் ஒரு கோடாலியோடு இருப்பார். ஒருமுறை அரசனின் பட்டத்து யானை, சிவகாமி யாண்டார் என்ற வயதான சிவனடியார் எடுத்து வந்த பூஜை பொருட்களை தட்டி விட, அவர் அழுது கொண்டே நின்றார். அரசனின் யானை என்பதால், யானையையோ யானைப் பாகனையோ தண்டிக்கவும் முடியவில்லை.

தன் நிலையை நினைத்து வருந்தினார். இதனைக் கேள்விப்பட்ட. அடுத்த நிமிடம், கோபத்தோடு விரைந்து வந்த எறிபத்தர், அரசனுடைய பட்டத்து யானை என்றும் பார்க்காது யானையையும், யானைப் பாகனையும் தன் கையில் இருந்த மழுவால் (கோடரியால்) தண்டித்தார். இந்தச் செய்தியை ஓடிச்சென்று பலரும் அரசரிடம் தெரிவித்தனர். சிவனடியார் ஒருவர் இக்கொடுஞ்செயலைச் செய்தார் என்று சொல்ல, அப்படி சிவனடியார் ஆத்திரத்தோடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று விசாரித்தார். முழுக்கதையையும் அறிந்த புகழ்ச் சோழன், எறிபத்த நாயனார் செயல் சரிதான் என்றும், இதற்குத் தானும் பொறுப்பு என்று தன்னையே வாளால் தண்டித்துக் கொள்ள முனைய, எறிபத்த நாயனார்,அந்த வாளை வாங்கி தன்னை மாய்த்துக் கொள்ள முயன்றார் .இவை அத்தனையும் உணர்ச்சி வசத்தால் செய்யப்பட்ட செயல்கள் என்றாலும், இதனுடைய உயிர் துடிப்பாக இருப்பது சிவ நிந்தையைப் பொறுக்க முடியாமையும், சிவனுடைய பூஜை அவமதிப்பை தாங்க முடியாமையும்,சிவ நெறியிலும் சிவ பூஜையிலும் உள்ள மிக அழுத்தமான நம்பிக்கையும் ஆகும். அழுத்தமான சிவபக்தி என்பது தான் இதன் மையப் புள்ளி.
இச்செயல்களை திருவிளையாடலாக நடத்திய சிவபெருமான், இடப வாகனத்தில் உமையம்மையாரோடு தோன்றி, இவர்களை எல்லாம் மறுபடியும் உயிர்ப்பித்து அருளினார்.

6-3-2026 வெள்ளி
சனிப் பெயர்ச்சி

சங்கட சதுர்த்தி தினமான இன்று வாக்கிய பஞ்சங்கப்படி 6.3.2026 அன்று, காலை 8:24 மணிக்கு, சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். மேஷம், மீனம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு ஏழரைச் சனி நீடிக்கிறது. தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும், கன்னி ராசிக்கு கண்டகச் சனியும், சிம்ம ராசிக்கு அஷ்டமச் சனியும் நடைபெறுகிறது. இந்த ராசிக்காரர்கள் தகுந்த பரிகாரம் செய்து கொள்வது நல்லது. மகர ராசி, துலா ராசி, ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் யோக பலன்கள் உண்டு. மற்ற ராசிக்காரர்களுக்கு மத்திமமான பலன்கள் நடக்கும்.

Related Stories: