காடையீஸ்வரர் திருக்கோயில்

ராஜகோபுர தரிசனம்!

பத்தாம் நூற்றாண்டு கோயில் வரிசையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், காடையூர் என்னும் பழம்பெரும் ஊரில் அமைந்துள்ளது காடையீஸ்வரர் கோயில். இக்கோயில் சோழர் காலத்தைச் சேர்ந்தது என்றும், குறிப்பாக கி.பி. 9, 10ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ காடையீஸ்வரர்-அம்பாள் நீலா தேவி.

முன்னொரு காலத்தில் நட்டூர் எனப்பட்ட தற்போதைய காடையூரில் ஆட்சி செய்து வந்த குறுநில மன்னன், பாண்டிய நாட்டு அரசனுக்கு யுத்தத்தில் உதவி செய்ய முன் வந்தான். பாண்டிய நாட்டு அரசன் மீது படையெடுத்து வந்த வடநாட்டு மன்னன் பெரும் படையுடன் யானைப் படையையும் அழைத்துக் கொண்டு வந்து தாக்குதலை நடத்தினான். ஆனால், நட்டூரில் இருந்த மன்னனிடம் அதிக படை பலம் இல்லை. அவர் நாட்டில் நிறைய காடைக் குருவிகள் இருந்தன. நட்டூர் மன்னன் சிவ பக்தர்.

ஆகவே, பெரும் படையுடன் வந்த வடநாட்டு மன்னனை தோற்கடிக்க சிவபெருமானின் உதவிக் கோரி வேண்டினான். அவர் ஒரு காடைக் குருவியாக உருவெடுத்து பல காடைக் குருவிகளுடன் சேர்ந்து யானை படைகளை தாக்கலானார்.யானைகளின் கண்களையும், காதுகளையும் கொத்தி நூற்றுக்கணக்கான காடைக் குருவிகள் காயப்படுத்தியதால், யானைகளுக்கு மதம் பிடித்து படையினரையே திருப்பித் தாக்கின. படையெடுத்து வந்த வெளிநாட்டு மன்னன் பயந்து போய் எஞ்சி நின்ற படையினருடன் ஓட்டம் பிடித்தான். மன்னனைக் காத்த காடைக் குருவிகள் பெருமை பெறும் வகையில் நட்டூர் என்பது காடையூர் என்ற பெயராயிற்று என்று புராணக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கோயிலின் வரலாற்றில் வெள்ளையம்மாள் என்ற பெண்மணியின் கதை மிக முக்கியமானதாகக் கூறப்படுகிறது. அவர் மீது அவரது அண்ணன்மார்கள் விபச்சாரம் செய்ததாக அவதூறு சுமத்தினார்கள். அவள் தன் பதிவிரதையை நிரூபித்தாள். அதனால் அவளின் அண்ணன்மார்கள். தங்களின் சொத்துக்களை வெள்ளையம்மாளுக்கே கொடுத்து விட்டு ஊரை விட்டே சென்றுவிட்டனர். வெள்ளைஅம்மாள் பல காலம் தன் மக்களுடன் வாழ்ந்து பிறகு தெய்வமானாள்.

கோயில் அமைப்பு ஆரம்ப சோழர் கால கட்டிடக் கலையை பிரதிபலிக்கிறது.கோயில் கல்லால் கட்டப்பட்ட கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய அமைப்புகளுடன் எளிமையான வடிவில் அமைந்துள்ளது. அதிக அலங்காரங்கள் இல்லாத கட்டுமானம், பழங்கால கோயில்களின் இயல்பான தன்மையை வெளிப்படுத்துகிறது.கோயிலின் கோபுரம் உயரம் குறைந்ததாக இருந்தாலும், மரபு சார்ந்த வடிவமைப்பைக் கொண்டது.

கோபுரத்திலும் சுற்றுச் சுவர்களிலும் காணப்படும் சில சிற்பங்கள் காலப்போக்கில் சேதமடைந்துள்ளன. இருப்பினும் அவை அக்காலக் கட்டிடக்கலைப் பாணியையும் சமய நம்பிக்கைகளையும் உணர்த்துகின்றன.இந்தக் கோயில், வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், அந்தப் பகுதியின் வரலாறு மற்றும் கட்டிடக்கலை மரபை அறிய உதவும் முக்கிய நினைவுச்சின்னமாக விளங்குகிறது.

திலகவதி

Related Stories: