கொற்றவை என்ற காவல் தெய்வம்!

வழிபாட்டுக்குரிய பெண் தெய்வமாக, கொற்றவை நம் ஆன்மிக நம்பிக்கையில் இடம் பெற்ற போதும், தோற்றம் வன்முறையை பிரதிபலிக்கக் கூடியதாக இருப்பது ஏன்? மென்மையான பெண்மை கொற்றவையாக உருமாறியது எப்படி? பாசம், இரக்கம், தாய்மை என்ற இயற்கையையும் மீறி வன்மம், போர்க்குணம் என்றெல்லாம் அந்தப் பெண் தெய்வத்துக்கு எப்படி வந்தன?

‘நீறு பூத்த நெருப்பு’ என்பதுதான் பெண்மை. ஆனால், உள்ளுக்குள்ளே கனலாய்ச் சுடும் வெம்மையும் உண்டு. பொதுவாக ஆணுக்கு அடங்கிப் போக வேண்டிய வாழ்க்கையில், தனக்கு ஏற்பட்டிருக்கும் அநீதி, அதிருப்தி, அபாண்ட அவமானம், வன்கொடுமை என்று எதற்கும் எதிர்வினை ஆற்ற இயலாத (அல்லது விரும்பாத?) பலவீனம், உலக வாழ்வை நீத்த பிறகு, அரூபமாக பழிக்குப் பழி வாங்கும் ஆவேசமாக மாறுகிறது என்பது நம் மூதாதையரின் நம்பிக்கையாக இருந்தது.

புராணக் கதைகள், மென்மையான கதாபாத்திரங்களாகச் சித்தரிக்கப்படும் பெண் தெய்வங்கள், அநீதிக்கு எதிராக உக்கிரமாக மாறுவதை விவரித்திருக்கின்றன. உதாரணமாக கிருஷ்ணனின் மனைவி சத்தியபாமாவைச் சொல்லலாம். மக்களுக்கும், தேவர்களுக்கும் கடுந்துன்பம் விளைவித்த நரகாசுரனை அவனுடைய அன்னையான சத்தியபாமா வதம் செய்திருக்கிறாள். தன்னை பலர் முன்னிலையில், அரசவையில் மானபங்கம் செய்த துரியோதனனை, பீமன் மூலம் போரில் மாளச் செய்து ‘அவனுடைய குருதியைப் பூசித்தான் கூந்தல் முடிவேன்’ என்று ஆவேசமாய் சூளுரைத்தாள் பாஞ்சாலி.

தனி சமூக வழிபாட்டு தெய்வங்களாக அரிக்கம்மா, இசக்கியம்மன், உக்கிர மாகாளி, எட்டுக்கை அம்மன், எல்லைப் பிடாரி, கண்ணகியம்மன், காட்டேரி, குதிரைக் காளி, கொல்லிப்பாவை, செல்லியம்மன், தீப்பாய்ச்சியம்மன், பத்ரகாளி, மலையாயி, முத்தாரம்மன், ராக்காச்சி, வீரகாத்தியம்மன், வேம்புலியம்மன் என்று பலநூறு பெண் தெய்வங்கள், தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோயில் கொண்டு திகழ்கின்றன.

அரசனே ஆனாலும் அநீதிக்கு எதிராகப் போராடிய கண்ணகி, ஆவேசத்துடன் மதுரை மாநகரை எரித்த பிறகு, தானும் உயிர் நீத்தாலும், தணிய வேண்டிய ஆத்திரம் மிச்சம் இருந்ததால், அரூபமாகவே தீயோருக்கு அச்சுறுத்தவும், தண்டனை அளிக்கவும் தன் ‘வாழ்க்கை’யை, பெண் தெய்வமாகத் தொடர்கிறாள் என்பதும் பலருடைய நம்பிக்கையாக இருக்கிறது.

பொதுவாகவே பெண் தெய்வங்கள் தத்தமது கிராம தெய்வங்களாகவே போற்றப்பட்டு வருகின்றன. சில வகுப்பாருக்குக் குல தெய்வமாகவும் திகழ்கின்றன. மன்னர் காலத்தில் அந்தந்த மன்னர் தாம் போருக்குச் செல்லுமுன் தமக்கு வெற்றி ஆசி அருளுமாறு அந்த தெய்வங்களை வேண்டிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அந்த வகையில் கொற்றவை வழிபாடு குறிப்பிடத்தகுந்தது. நாளாவட்டத்தில் கொற்றவை என்ற பெயர் துர்க்கை, காளி, அம்மன் என்றெல்லாம் மருவி விட்டன. பெயர் மாறினாலும், இந்தத் தெய்வங்கள் கொற்றவையின் பண்புகளையே கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் அருளாசி வழங்கும் வராகி அம்மன், கொற்றவையின் மரு உரு என்றே வணங்கப்படுகிறாள். தோற்றத்தில் பன்றி முகம் கொண்டிருந்தாலும், வழிபாட்டு முறைப்படி இந்த அம்மன் கொற்றவையாகவே கருதப்படுகிறாள். காசியிலுள்ள விஸ்வநாதர் ஆலயத்திற்கு அடுத்தபடியாக, வராகி அம்மன் தனிச் சந்நதி கொண்டிருப்பது இங்கு மட்டுமே. ராஜராஜ சோழன் எந்த ஒரு போரில் ஈடுபடு முன்னரும் இந்த வராகி அம்மனை வணங்குவதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தான்; போரில் வெற்றி கண்டபின், திரும்ப வந்து வராகிக்கு மலர்களால் அர்ச்சித்து, அம்மன் புகழ் பாடி, நன்றி செலுத்தியிருக்கிறான் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏமப்பூரில் சோழர் காலத்தைச் சேர்ந்த வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது.

இதனருகே, கொற்றவை சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. எட்டு கரங்களுடன், அவற்றில் ஆயுதங்களைத் தாங்கியவாறு சிற்பம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எருமை தலை மீது கால்களை பதித்து நின்றிருக்கும் இந்தக் கோலம், மஹிஷாசுரமர்த்தினி என்ற துர்க்கையை நினைவூட்டுகிறது. 1200 ஆண்டு காலம் தொன்மையானது என்று கருதப்படும் இந்தச் சிலை, கி.பி. 8 மற்றும் 9ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்கிறது தொல்பொருள் ஆராய்ச்சி. கரசானூர், வெங்கந்தூர், வேடம்பட்டு போன்ற இடங்களிலும் கொற்றவை சிற்பங்கள், ஏரி நீருக்குள் மூழ்கியும், மண்ணுக்குள் புதைந்தும் கிடக்கின்றன என்றும் தகவல்கள் உண்டு. இந்தச் சிலைகளை மீட்டெடுத்து பொதுமக்கள் வழிபாட்டுக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சங்க இலக்கியங்களில் கொற்றவை பற்றிய செய்திகள் பரவலாகக் காணக் கிடைக்கின்றன. உதாரணமாக கலித்தொகையில் ‘கொற்றி’ என்று கொற்றவை குறிப்பிடப்பட்டிருக்கிறாள். அதில் இடம் பெறும் ஒரு பாடலில், தலைவியிடம் ‘கொற்றிக்குப் பேய் பிடித்து விட்டது’ என்று தலைவன் சொல்வதாகவும், அதற்கு தலைவி, ‘கொற்றி என்பதே பேய் வடிவம்தான். அதற்கே பேய் பிடித்து விட்டதாகச் சொன்னால் யார் நம்புவார்கள்?’ என்று கேட்பதாகவும் வர்ணனை வருகிறது.

பெரும் புலவர் நக்கீரர் தன்னுடைய ‘திருமுருகாற்றுப்படை’ நூலில் முருகனைக் குறிப்பிடும்போது, ‘கொற்றவை சிறுவ’ என்றழைக்கிறார். அதாவது, முருகப்பெருமானின் தாயார், கொற்றவை! சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட சுடர்கள் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகளாக உருவெடுக்க, அவர்களைக் கார்த்திகைப் பெண்கள், தாய்மை பொங்க எடுத்து, பாசத்தைப் பொழிந்தார்கள். இந்தக் குழந்தைகளை பார்வதி தேவி ஒன்று சேர்க்க, ஆறு குழந்தைகளும் ஆறு முகங்களும், ஓருடலும் கொண்ட முருகப்பெருமானாக உருமாறின. இந்த வகையில் கார்த்திகைப் பெண்களையோ அல்லது உமையவளையோதான், நக்கீரர் கொற்றவை என்று அழைத்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது.

புராணம் எப்படியாயினும் கொற்றவையை, முருகக் கடவுளின் தாயாகவே பழந்தமிழர்கள் பாவித்திருக்கிறார்கள். கொற்றவையைப் பற்றி விரிவான தகவல்களைக் கொடுப்பது சிலப்பதிகாரம் மட்டும்தான் என்பது பொதுவான கருத்து. பிற நூல்களில் ஒருசில இடங்களில் மட்டும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தெரிவிக்கப்பட்டாலும், சிலப்பதிகாரம், மதுரை காண்டத்தில், ‘காடு காண் காதை’ என்ற முழு அத்தியாயமும், கொற்றவை தெய்வத்தைப் பற்றிய விரிவான தகவல்களைத் தருகிறது.

வறட்சி மிகுந்த பகுதிகளில் வசிக்கும் மறவர்கள், மழை மற்றும் நீராதாரம் இல்லாததால், பயிர் விளைத்து, அதன் மூலம் வாழ்வாதாரத்தை அடைய இயலாததால், வேட்டையாடி மிருக உணவைத் தேடிக் கொள்ளவோ, பகைவருடன் போரிட்டு அவர்களுடைய சொத்துகளைப் பறிக்கவோ செய்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரிய வருகிறது. அவ்வாறு செல்லும்போது தம் முயற்சிகளில் வெற்றியை அருளுமாறு கொற்றவை தேவியை வேண்டிக் கொண்டு செல்வது அவர்களுடைய வழக்கமாக இருந்திருக்கிறது.

கொற்றவையின் தோற்றத்தை சிலப்பதிகாரம் இவ்வாறு வர்ணிக்கிறது: ‘‘இவளுடைய கம்பீரத்தை உடனிருக்கும் சிங்கக் கொடி உறுதிப்படுத்துகிறது. கூடவே மென்மையான பசுங்கிளியும் தன் கரத்தில் ஏந்தியிருக்கிறாள். அதாவது, தீயோருக்கு சிம்மமாகவும், நல்லோருக்குக் கிளிப் பிள்ளையாகவும் அருள்பாலிப்பவள். இவளுடைய வாகனம், கலைமான். பேய்களே இவளுக்குப் படையாகப் பணி புரிகின்றன. ஓங்கிய கரத்தில் சூலம் ஒளி வீசுகிறது. வெற்றியைத் தருகின்ற வாளையுடையவள். எள்ளுருண்டை மற்றும் பொரி, அவரை, மொச்சை கலந்த சுண்டல் ஆகியவற்றை விருப்பமான நிவேதனப் பொருட்களாக ஏற்பவள். குருதி படிந்த மண்டையோட்டை வலக்கையில் தாங்கியவள். உண்மையான பக்தனுக்கு, அவன் பகை வெல்ல ஓடோடி வந்து உதவுபவள்.

‘‘தன் தலையில் வெண்ணிறப் பிறையைச் சூடியிருக்கிறாள். நெற்றிக்கண் எந்நேரமும் கோப ஜ்வாலையை உமிழத் தயாராக இருக்கிறது. பவளம் போன்ற வாயும், ஒளி வீசும் முத்துப்பல் வரிசையும் கொண்டவள். கயிலைநாதனான நீலகண்டனைப் போல, தானும் நஞ்சை உண்டதனால் கருநிற கழுத்தை உடையவள். நச்சுப் பாம்புகளைத் தன் மார்புக் கச்சையாக அணிந்தவள், கைகளை வளையல்கள் அலங்கரிக்கின்றன. யானையின் தோலையே ஆடையாக்கி, அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள். இவளது இடக்காலை சிலம்பும், வலக்காலை கழலும் அணி செய்கின்றன.’’

கொற்றவையின் பண்பு நலன்களைக் கொண்டவர்களாகவே கிராமத்துப் பெண் தெய்வங்கள் பல போற்றப்படுகின்றன. தங்களது காவல் தெய்வங்களாகவே அவர்களை வழிபட்டவர்கள் தம் கிராமத்து எல்லையிலேயே அம்மனுக்கு கோயில் நிர்மாணித்து வணங்கியிருக்கிறார்கள். அம்மனின் வீரம் செறிந்த காவல் பணியால்தான் தம் கிராமம் பாதுகாப்பாக இருக்கிறது என்று அவர்கள் முழுமையாக நம்பினார்கள்.

நாளடைவில், கிராமம் பலவகைகளிலும் வளர்ச்சி பெற்றபோது ஊருக்குள் கோயில் உருவாக ஆரம்பித்தது. அப்போது இந்த கிராம தேவதையை அந்தக் கோயிலுக்குள்ளேயே தனிச் சந்நதியில் பிரதிஷ்டை செய்து பெருமை சேர்த்தார்கள். இந்த தேவதை துர்க்கை என்றும் போற்றப்பட்டது. துர்க்கை, வடக்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். வடக்கு என்பது ஈசனின் திக்கு என்பதாலும், சிவபெருமானின் பரிவார தெய்வம் என்பதாலும், இந்த அம்மனும் அந்த திசையையே நோக்கியிருக்கிறாள்.

துர்க்கை, ராகு கிரகத்தின் அதிதேவதையாகக் கருதப்படுவதால், ராகு தோஷப் பரிகாரத் தலங்களில் (கதிராமங்கலம் போல) கிழக்கு நோக்கி அருள்வது போலவும் கொலுவிருக்கிறாள்.வேறு வேறு பெயர்களில் இன்றளவும் கொற்றவை வணங்கப்பட்டு வருகிறாள் என்பதுதான் இன்றைய ஆன்மிக அனுபவம்.

(தொடரும்!)

பிரபுசங்கர்

Related Stories: