ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று நடைபெற்ற வார மாட்டுச்சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், ரூ.7 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரையிலான 50 கன்றுகள், ரூ. 23 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் மதிப்பிலான 250 எருமைகள், ரூ.23 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான 300 பசுக்கள், ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்துக்கும் மேலான 50க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை வாங்குவதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கோவா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் வந்து வாங்கி சென்றனர்.
சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளில் 90 சதவீதம் மாடுகள் விற்பனையாகின. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் ரூ.50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணத்தை எடுத்துச்செல்ல உரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை கிழக்கு தொகுதிக்குள் இருப்பதால், மாடுகளை வாங்க வந்தவர்களும், விற்பனை செய்த மாடுகளுக்கான தொகையை எடுத்துச்செல்பவர்களும் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை எடுத்துச்செல்பவர்கள், மாட்டுச் சந்தையில் ‘யாரிடமிருந்து,
யாருக்கு மாடு விற்பனை செய்யப்பட்டது? என்ன தொகைக்கு மாடு விற்பனை செய்யப்பட்டு பணம் எடுத்துச் செல்லப்படுகிறது என்பன உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்பட்ட ரசீதுடன் பணத்தை எடுத்துச்சென்றனர். இதனால், கடந்த இடைத்தேர்தலின்போது ஏற்பட்ட பணம் பறிமுதல் நெருக்கடி களையப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
The post ரசீதுடன் பணம் கொண்டு செல்லும் மாட்டுச்சந்தை வியாபாரிகள் appeared first on Dinakaran.