விவசாயியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான மேல்மலையனூர் சர்வேயர் சஸ்பெண்ட்; ஒப்பந்த சர்வேயர் டிஸ்மிஸ் நில அளவைத்துறை உதவி இயக்குநர் உத்தரவு

 

விழுப்புரம், ஜன. 10: மேல்மலையனூர் தாலுகாவில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான சரவேயர் சஸ்பெண்ட் ெசய்யப்பட்டுள்ளார். ஒப்பந்த சர்வேயர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே வயலாமூரை சேர்ந்தவர் குமார். விவசாயியான இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்காக மேல்மலையனூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள தலைமை நிலஅளவையர் தங்கராஜிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது நிலத்தை அளவீடு செய்து கொடுக்க ₹9 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி லஞ்ச பணத்தை கொடுக்க சென்றபோது உரிமம் பெற்ற நிலஅளவையர் பாரதியிடம் கொடுக்குமாறு தங்கராஜ் கூறியுள்ளாராம்.

அப்போது உரிமம்பெற்ற சர்வேயர் பாரதி இடைத்தரகர் சரத்குமாரிடம் வழங்குமாறு அவரிடம் கொடுக்கவே அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை விழுப்புரம் ஊழல்தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே சர்வேயர், ஒப்பந்த சர்வேயர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல்மலையனூர் தாலுகா தலைமை நில சர்வேயர் தங்கராஜை சஸ்பெண்ட் செய்தும், ஒப்பந்த சர்வேயர் பாரதியை டிஸ்மிஸ் செய்து அவரது உரிமத்தை ரத்து செய்தும் விழுப்புரம் நிலஅளவைத்துறை உதவிஇயக்குநர் சீனுவாசன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

The post விவசாயியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான மேல்மலையனூர் சர்வேயர் சஸ்பெண்ட்; ஒப்பந்த சர்வேயர் டிஸ்மிஸ் நில அளவைத்துறை உதவி இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: