தா.பழூர், ஜன.10: மதனத்தூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட மதனத்தூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் மருத்துவ பணிகள் துறை அரியலூர் மண்டலம் சார்பில் தமிழ்நாடு நீர்ப்பாசன மற்றும் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் 2024-2025 கீழ் கால்நடைகளுக்கு சிறப்பு மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில் ஆற்று நீர் பாசன உப வடிகால் கிராமங்கள் தோறும் தற்போது கால்நடைகளுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விவசாயிகளின் வீடுகள் உள்ள பகுதிகளுக்கு சென்று முகாம் அமைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமானது தா.பழூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட மதனத்தூர் கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம், சினைப்பரிசோதனை, கர்ப்பப்பை வளர்ச்சி குன்றிய கிடேரி பசுக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
இந்த முகாம் அரியலூர் மண்டல இணை இயக்குனர் மரு பாரிவேந்தன் அறிவுறுத்தலின் பேரில் உடையார்பாளையம் கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் ரமேஷ் முன்னிலை வகித்து முகாமினை தொடங்கி வைத்தார்கள்.
தா.பழூர் கால்நடை மருத்துவர் பெரியசாமி , கால்நடை பராமரிப்பு ஆய்வாளர் சுமதி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் மகாலட்சுமி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கினர். மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு மாடுகளுக்கு ஏற்பட்ட கூடிய இனப்பெருக்க கால பராமரிப்பு, கன்று பேறு கால பராமரிப்பு மற்றும் இனப்பெருக்க கால நோய்கள் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் பாதிப்புகள் குறித்தும் அதனை சரி செய்யும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
The post மதனத்தூர் கிராமத்தில் கால்நடைகளுக்கான மலடுநீக்க சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.