பெரும்புதூர், ஜன.9: படப்பை, பெரும்புதூர் பாலப் பணியை இந்த ஆண்டே முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) பேசுகையில், ‘‘நடுக்கடலில் அய்யன் திருவள்ளுவரையும், விவேகானந்தரையும் ரூ.37 கோடியில் இணைத்து உலகமே அறியாத தொழில்நுட்பங்களுடன் அந்த பாலத்தை முதல்வரின் திருக்கரங்களால் திறந்து வைத்த பொதுப் பணித் துறை, இப்போது படப்பையிலும் ,பெரும்புதூரிலும் அந்த பாலங்கள் என்ன நிலையில் இருக்கின்றன. அதனை நீங்கள் கூடிய விரைவில் நிறைவேற்றித் தருவீர்களா, முதல்வருக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாலமாக இருக்கிற அமைச்சர் இந்த பாலத்தை வெகுவிரைவில், போர்க்கால அடிப்படையில் கட்டித் தருவீர்களா? என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘அங்கு போக்குவரத்து அதிகமாகத்தான் இருக்கிறது. அந்த பாலத்தை நானே இரண்டு முறை நேரடியாகச் சென்று பார்த்திருக்கிறேன். அந்த ஒப்பந்ததாரரை நானே நேரடியாக அழைத்துப் பேசியிருக்கிறேன். ஆகவே, விரைந்து அந்த பாலத்தை இந்த ஆண்டே முடிப்பதற்கு வேண்டிய பணிகளை இந்த துறை எடுத்துக்கொள்ளும்’ என்றார்.
The post படப்பை, பெரும்புதூர் பாலப்பணி இந்த ஆண்டே முடிக்க நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல் appeared first on Dinakaran.