கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாட்டு தொழுவமாக இருந்த இடம் சீரமைப்பு: வேலி, கேட் அமைத்து நடவடிக்கை

திருவள்ளூர்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாட்டு தொழுவமாக இருந்த இடம் சீரமைக்கப்பட்டுள்ளது. அங்கு கால்நடைகள் நுழையாமல் தடுக்கும் வகையில் வேலி, கேட் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நாள்தோறும் சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுகள் அலுவலக நுழைவு வாயிலேயே தஞ்சம் புகுந்து வரும் அவலநிலை இருந்து வந்தது. அலுவலக நுழைவு வாயிலில் கலெக்டர் வாகனம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் அலுவலகத்தைச் சுற்றி ஏராளமான மாடுகள் சுற்றித் திரிந்தும் படுத்தும் கிடந்தன.

மாட்டுத் தொழுவமாக மாறிய அந்த இடத்தை அலுவலர்கள் சுத்தம் செய்யும் அவலமும் ஏற்பட்டது. மேலும் ஒரு சில மாடுகள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், மாடுகள் சண்டையிட்டுக் கொள்வதால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உறைந்தனர். அலுவலகத்திற்கு காலை 9.30 மணி முதல் வருகை தரும் அதிகாரிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு இறங்கிச் செல்லும்போது கூட்டம் கூட்டமாக முட்டுவது போல் மாடுகள் வருவதால் அலறியடித்துக் கொண்டு ஓடக்கூடிய சூழ்நிலையும் அங்கு காணப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் சுற்றி திரியும் மாடுகளால் பெரும் அச்சத்தில் உறைந்தனர்.மேலும் மாடுகள் முட்டி உயிரிழப்பதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வந்தது. எனவே கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் சீரமைக்கப்பட்டு கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வாகனங்கள் நிறுத்துமிடம், பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிடம் இடம், அரசு வாகனங்கள் நிறுத்துமிடம் என தனித்தனியாக பிரித்து வாகனங்களை நிறுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளிகளின் வாகனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் வாகனங்கள் எங்கெங்கு நிறுத்த வேண்டும் என்றும் அறிவுப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து கழிவறைகளும் சீரமைகக்கப்பட்டுள்ளன. மேலும் கால்நடைகள் உள்ளே வராதவாறு தடுக்கும் விதமாக கலெக்டர் அலுவலக வளாகத்தைச் சுற்றிலும் வேலி மற்றும் கேட் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாட்டு தொழுவமாக இருந்த இடம் சீரமைப்பு: வேலி, கேட் அமைத்து நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: