400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இஸ்லாமியர்களின் ஈதுகா மைய வளாகத்தை அகற்ற எதிர்ப்பு: கலெக்டரிடம் மாஜி அமைச்சர் மனு

திருவள்ளூர்: திருவள்ளூரில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இஸ்லாமியர்களின் ஈதுகா மைய வளாகத்தை நெடுஞ்சாலைத்துறை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாஜி அமைச்சர் பி.வி.ரமணா கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். திருவள்ளூர் – ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் இஸ்லாமியர்களின் தொழுகை செய்யும் ஈதுகா மைய வளாகத்தில் கடந்த 400 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் பண்டிகை நாட்களில் தொழுகை செய்து வருகின்றனர். இந்நிலையில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக அந்த ஈதுகா மைய வளாகத்தை அகற்றப்போவதாக நெடுஞ்சாலைத் துறையினர் நோட்டீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் சிறுபான்மையின மக்கள் சாலை விரிவாக்கத்திற்காக ஈதுகா மைய வளாகத்தை அகற்றாமல் இருக்க கலெக்டரிடம் வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனையேற்று முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். கலெக்டர் த.பிரபுசங்கர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா நிருபர்களிடம் கூறுகையில், சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஈதுகா மைய வளாகம் அகற்றப்படும் சூழ்நிலை வந்தால் அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றார். இதில் அதிமுக நிர்வாகிகள் வேலஞ்சேரி சந்திரன், நேசன், எழிலரசன், கந்தசாமி, சௌந்தர்ராஜன், ஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.

The post 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இஸ்லாமியர்களின் ஈதுகா மைய வளாகத்தை அகற்ற எதிர்ப்பு: கலெக்டரிடம் மாஜி அமைச்சர் மனு appeared first on Dinakaran.

Related Stories: